வாஷிங் “டன்“ சுந்தர் என எழுத முடியவில்லையே? சோகத்தோடு வைரலாகும் டிவிட்டர் பதிவு!

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 205 ரன்களில் சுருண்டது. அதையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 365 ரன்களை குவித்த நிலையில் தற்போது 2 ஆவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 135 ரன்களுக்கு ஆட்டம் இழந்து இருக்கிறது.

இப்படி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டிக்கு நடுவே தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது முறையாக தன்னுடைய சதம் வாய்ப்பை இழந்து இருக்கிறார். ஆனால் இன்னொரு வீரரான ரிஷப் பந்த் இங்கிலாந்துக்கு எதிரான முதல் சதத்தை விளாசி இந்திய ரசிகர்களுக்கு ஓரளவு நிம்மதியைக் கொடுத்து உள்ளார் என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் இப்படி தொடர்ந்து இரண்டாவது முறையாக 90 க்கும் மேல் ரன் எடுத்து சதத்தை இழந்தது குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்தி தன்னுடைய டிவிட்டர் பதிவில் தனது வருத்தத்தை வெளியிட்டு உள்ளார். அதில் “‘வாஷிங்‘ ‘டன்‘ சுந்தர் என்று எழுதலாம் எனக் காத்திருந்தேன். பரவாயில்லை. நான் இதனை விரைவில் பயன்படுத்த வேண்டி வரும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றும் விலைமதிப்பற்ற இன்னிங்ஸ்“ என்றும் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவு தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர் கூட்டணியைக் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். காரணம் இருவரும் கூட்டணி அமைத்து சதம் அடிப்பதற்கு செய்த வேலைகளை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் பூரித்து போயினர். முதலில் 82 பந்துகளுக்கு அரை சதம் விளாசிய பந்த் தொடர்ந்து அடுத்த வெறும் 33 பந்துகளில் சதத்தை எட்டிப் பிடித்தார். இதனால் ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் இவ்வளவு குறைந்த பந்திற்கு சதம் விளாசிய ரிஷப் பந்த்தை பார்த்து முன்னாள் வீரர்களும் ஆச்சர்யம் அடைந்து விட்டர்.

இவரோடு கூட்டணி வைத்த வாஷிங்டன் சுந்தர் நேற்று விக்கெட்டை இழக்காமல் 60 ரன்களை எடுத்து இருந்தார். ஆனால் இன்றைய ஆட்டம் அவருக்கு சாதகமாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் அக்சர் படேல் முதலில் 43 ரன்களுக்கு ஆட்டம் இழக்க பென் டோக்ஸின் அடுத்த அடுத்த பந்துகளுக்கு இந்திய வீரர்களின் 3 விக்கெட் விழுந்து விட்டது. இதனால் நாட் அவுட் நிலையிலேயே இருந்த வாஷிங்டன் சுந்தர் 96 ரன்கள் எடுத்தும் சதம் கனவை நிறைவேற்ற முடியாமல் கிரவுண்டை விட்டு வெளியேறினார். இந்த வாய்ப்பைக் குறித்துத்தான் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் நொந்துபோய் உள்ளனர்.