லைக்ஸ், ஷேருக்கு பின்னால் ஏகப்பட்ட விஷயம் இருக்குது: 'கீ' இயக்குனர்

  • IndiaGlitz, [Sunday,March 24 2019]

இன்றைய கணினி உலகில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத நபரே இல்லை என்ற அளவுக்கு சமூக வலைத்தளங்கள் பரந்து விரிந்து உள்ளது. அரசியல்வாதிகள் ஓட்டு கேட்பது முதல் சினிமாக்கள் புரமோஷன் வரை சமூக வலைத்தளங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இண்டர்நெட் பயன்படுத்துவதன் பின்னால் இருக்கும் அபாயங்களை விஷாலின் 'இரும்புத்திரை' திரைப்படம் விரிவாக விளக்கியது. அதேபோல் சமூக வலைத்தளங்களின் பின்னால் உள்ள பலர் அறிந்திராத திடுக்கிடும் தகவல்கள் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'கீ' படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

நேற்று சென்னையில் நடைபெற்ற 'கீ' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்த படத்தின் இயக்குனர் காளீஸ் பேசியபோது, 'சமூகவலைதளங்களில் நீங்கள் போடுகிற லைக், நீங்க பண்ணுற ஷேரிங் பின்னால் ஏகப்பட்ட விஷயம் இருக்கிறது. கீ படம் பார்த்த பின் அதை செய்ய யோசிப்பீர்கள். பள்ளி, கல்லூரிகளில் சமூகவலைதளம் கையாளுவது பற்றி வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

சமூக வலைத்தளங்கள் மூலம் சமீபகாலமாக குற்றங்கள் அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். உதாரணத்திற்கு சமீபத்தில் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்த பொள்ளாச்சி பாலியல் சம்பவம். இந்த நிலையில் சமூக வலைத்தளங்கள் குறித்த ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் படமாக 'கீ' உண்மையிலேயே இருந்தால், நிச்சயம் இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.