தமிழ் நடிகருக்கு கோல்டன் விசா… சிறப்பு அங்கீகாரத்தால் நெகிழ்ச்சி!

  • IndiaGlitz, [Friday,December 24 2021]

நடிகரும் இயக்குநருமான ஆர்.பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் என்பதால் நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சியடைந்து ஐக்கிய அமீரத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

துறைசார்ந்த சாதனையாளர்கள், முக்கியப் பிரபலங்கள், தொழில் அதிபர்கள், முதலீட்டாளர்கள், அரிய திறன் கொண்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி கவுரவிக்கிறது. இந்த விசாவை பயன்படுத்தி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அடிக்கடி சென்றுவரலாம் என்பதோடு நீண்டகால குடியிருப்பு உரிமையும் பெற முடியும். மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தானாகவே நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் சிறப்பு அங்கீகாரம் கொண்ட கோல்டன் விசாவை தமிழ் நடிகர் ஆர்.பார்த்திபன் பெற்றுள்ளார். மேலும் இதுகுறித்து, எனக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். துபாய் அரசாங்கத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த சிறப்புரிமைக்கு தகுதியானவன் என்று என்னை கருதியதற்காக துபாய் அரசுக்கு அன்பும் நன்றியும் என்று நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டது. மலையாள சினிமாவில் நடிகர் மோகன் லால், நடிகர் துல்கர் சல்மான், நடிகை மீரா ஜாஸ்மீன், பாடகி சித்ரா போன்றோர் இந்த சிறப்பு அங்கீகாரத்தை பெற்றுள்ளனர். சமீபத்தில் தமிழ் நடிகை த்ரிஷாவிற்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது. தற்போது சினிமாத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக நடிகர் பார்த்திபன் இந்த சிறப்பு அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.