close
Choose your channels

'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற வார்த்தையை தூக்கி எறியுங்கள்: பா.ரஞ்சித்

Saturday, August 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் பலவிதமான மதங்கள், மொழிகள் இருந்தாலும் இந்தியா என்று வரும்போது அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத்தான் நமது முன்னோர்கள் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று கூறி வந்தனர். ஆனால் இயக்குனர் ரஞ்சித் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, 'வேற்றுமையில் ஒற்றுமை. இந்த வார்த்தைகளைத் தூக்கி எறியவேண்டும். வேற்றுமையில் எப்படி ஒற்றுமை வரும். ஒற்றுமையில்தான் ஒற்றுமை வரும்' என்று கூறியுள்ளார். திருச்சியில் நேற்று நடைபெற்ற கல்வி உரிமை மாநாட்டில் இயக்குனர் ரஞ்சித் பேசியதாவது:

நமக்கு முன்னால் இருந்தவர்கள் நமக்காகச் சேர்த்து வைத்த ஒரே சொத்து கல்விதான். அதனால்தான் 'கல்வி எனும் பேராயுதத்தை ஏந்துவோம் ' என்கிறார் அம்பேத்கர். வேத காலத்தில் இருந்தே கல்வி, ஒரு சமூகப் பிரச்னையாகவே உள்ளது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சங்ககாலத்திற்கு பிறகு கல்வி நம்வாழ்வியலில் இருந்து விலகி மத மையப்படுத்தப்பட்ட ஒன்றாக மாறுகிறது.

தமிழ்க் கல்வியும் , தமிழும் மதத்தையும் கடவுளையும் பாடுவதாக மாற்றப்படுகிறது. அதிலும் யார் பாட வேண்டும், யார் பாடக் கூடாது என்கிற பிரிவினை இருந்தது. மிகப்பெரிய அறம் கொண்ட தமிழ்ச் சமூகத்தில் கோயில்களைப் போல ஒரு பொதுவான கல்வித் தளம் இல்லாமலே இருந்திருக்கிறது. உணவிற்கான சத்திரங்கள் அதிகம் இருந்தது. ஆனால் கல்வி நிலையங்கள் மட்டும் இல்லை. ஆகத் திட்டமிட்டே கல்வி மறுக்கப்பட்டிருக்கிறது.

அதன் விளைவாக வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் வாயிலாக, இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கிடைத்துள்ளது. கல்வியின் வாயிலாக மட்டுமே உரிமைகள் மீட்டெடுக்கப்படுகின்றன. நீங்கள் எந்த சாதியிலிருந்து வந்திருந்தாலும், கல்வி கற்றவர்கள் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். கல்வியின் மூலம் ஆட்சி அதிகாரம் கிடைக்கிறது.

கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதம். கல்வி என்னைக் கேள்வி கேட்கத் தூண்டுகிறது . நான் கேள்வி கேட்கத் தொடங்கியதும் அதிகாரத்தில் இருப்பவர்கள் பதற தொடங்குகிறார்கள். அடுத்ததாகத் தகுதி, திறமை என்கிற இரண்டு முக்கியமான வார்த்தைகள்தான் இந்தியச் சமூகத்தை கட்டியாண்டது.

உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு என்ன திறமை இருக்கு என்று உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் படிப்பவர்களை விமர்சிப்பது இன்றும் தொடர்கிறது. 'கோட்டாவுல வந்தான்' என விமர்சித்து இட ஒதுக்கீட்டில் படிப்பவர்களை ஒரு குற்ற உணர்ச்சியில் தள்ளுகிறது இந்தச் சமூகம்.

எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி நான் உயர்ந்த நிலை அடையும்போது, அது அதிகாரத்தில் இருப்பவர்களை எரிச்சலடையவும் கோபமடையச் செய்கிறது. இவனால் என் வேலை வாய்ப்பு பறிபோவதால் சலுகை அடிப்படையில் வருகிறார்கள் என மட்டம் தட்டுகிறார்கள். அரசு நிர்ணயம் செய்யும் மதிப்பெண்ணை எடுத்துத்தான் நான் படிக்க வருகிறேன். சலுகையில் வரல. இட ஒதுக்கீடு என் உரிமை.

கல்வி கிடைத்த குறைந்த காலத்திலேயே நான் உயர்ந்த நிலைக்கு வருகிறேன் என்றால் இங்க யாரு திறமைசாலி? என்னுடைய தகுதி என்பது நான் நல்லா படிப்பதால் கிடைக்கிறது. அது என் சாதியால் கிடைக்கவில்லை. இட ஒதுக்கீட்டிற்கோ, கல்விக்கோ ஒரு பாதிப்பு வரும்போது, ஏன் இந்தச் சமூகம் ஒரு பொது பிரச்சனையாக அணுகவே இல்லை என்றால், இட ஒதுக்கீடு ஒரு தரப்பிற்கு மட்டுமே உதவுவதாக பலரும் நம்புவதுதான். அதனால், இந்த கல்வி பிரச்னை ஒரு பொது பிரச்னையாகவே மாறவேயில்லை.

அடுத்ததாக வேற்றுமையில் ஒற்றுமை. இந்த வார்த்தைகளைத் தூக்கி எறியவேண்டும் . வேற்றுமையில் எப்படி ஒற்றுமை வரும். ஒற்றுமையில்தான் ஒற்றுமை வரும். பிரச்னையின் அடிப்படையில் மட்டுமே நாம் ஒன்றாக இயங்குகிறோம். நம் சமூக வாழ்வு நம்மைப் பிரித்து வைத்திருக்கிறது.

கல்விக்கான பிரச்னைகளுக்கு நாம் பொது ஒற்றுமையை எதிர்பார்க்கிறோம் எனில் , அதற்கு முன் சமூக தளங்களில் தேவையான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும். சாதிரீதியாக தான் ஒருவனுக்கு மேல் என்ற எண்ணம் இருக்கும் வரையில் யாரும் பொதுவான கல்வியை எதிர்பார்க்க மாட்டார்கள். அவர்களுக்குப் பிறரை விட உயர்ந்த கல்வியைத்தான் படிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். அதனால்தான் நடுத்தரவர்க்கம் இந்த கல்வி பிரச்னையை ஒரு சிக்கலாகவே பார்க்கவே இல்லை. அவர்களுக்கு இதனை ஒரு பொதுபிரச்னையாக பார்க்க நம் சமூகம் சொல்லித்தரவே இல்லை. எந்த பிரச்னையானும் அது ஒடுக்கப்பட்ட மக்களைத் தான் பாதிக்கும். என்ன அவங்கதான் சலுகை அடிப்படையில் வருவதாக மற்ற சமூகத்தினர் நினைக்கிறார்கள். இந்த உண்மையை நாம் பேச வேண்டும்.. அதுவரை இந்த நிலை மாற வாய்ப்பில்லை” என ஆவேசமாக முடித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.