புது எச்சரிக்கை ஒலி எழுப்பி சமூகப்படமாக மாறியிருக்கிறது டி.என். ஏ !
ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர், சேத்தன், பிக் பாஸ் ரித்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் டி என் ஏ.
காதல் தோல்வியால் குடித்து குடித்து மறுவாழ்வு மையம் வரை சென்ற வீட்டுக்கு உதவாத மகன் ஆனந்த் ( அதர்வா ) , எவ்வித நல்லது கெட்டதும் புரியாமல் யதார்த்தம் ஆகவும் இயற்கையாகவும் வாழ்வதாலேயே மனதளவில் குறைபாடு உள்ள பெண் என முத்திரை குத்தப்பட்ட திவ்யா ( நிமிஷா சஜயன் ). இந்தப் பெண்ணை விட்டால் இவனுக்கு வேறு பெண் கிடைக்காது, இவனை விட்டால் இவளுக்கும் மாப்பிள்ளை கிடைக்காது என இரண்டு குடும்பமும் ஒரு சேர நினைத்து திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பெல்லாம் பொய்யாக்கும் அளவிற்கு இருவரும் 100% புரிதலுடன் வாழத் துவங்குகிறார்கள். அதற்குள் கதையே முடிந்துவிட்டது என நினைத்தால் , கொஞ்சம் இருங்க பாய் என்கிறது திரைக்கதை. மகிழ்ச்சியான குழந்தைப் பிறப்பு மொத்தக் குடும்பத்தையும் புரட்டிப் போடுகிறது. அவ்வளவு ஆசையுடன் கொஞ்சி கொடுத்த குழந்தை மீண்டும் கைக்கு வருகையில் " இது என் குழந்தை இல்லை " என்கிறார் திவ்யா . உலகமே திவ்யாவை பைத்தியம் எனக் கூற ஆனந்த் மட்டும் முழுமையாக நம்புகிறார். ஒருவேளை குழந்தை கடத்தப்பட்டது எனில் ஏன் அதற்கு மாற்றாக இன்னொரு குழந்தை கொடுக்கப்பட்டது? இந்த கேள்வியுடன் கிளைமாக்ஸ் நோக்கி ஒவ்வொரு முடிச்சாக அவிழ்கிறது திரைக்கதை.
நிமிஷா சஜயன் , அம்மாடி நடிப்பு பொம்மாயி. அந்தக் கண்களில் அவ்வளவு உணர்வுகளை மிக எளிதாக வெளிப்படுத்துகிறார். ஓரிடத்தில் குழந்தையை பார்க்கும் போது அவர் கண்களில் அவ்வளவு வசனங்கள். பேசாமலேயே தன் கோபமான மௌனத்தில் நம்மை இருக்கையில் மயக்கி வைக்கிறார்.
அதர்வா தனது கெரியரிலேயே சிறந்த படம் என இந்தப் படத்தை பட்டியலில் டாப்பில் வைத்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு நடிப்பிலும் புதிய பரிமாணத்தை காட்டியிருக்கிறார். அதிலும் நிமிஷா சஜயன் போன்ற நடிகையுடன் இன்னொரு நடிகர் போட்டி போடுவது கடினம் என்கிற விதத்தில் அதர்வா தனது திறமையை மிக அற்புதமாகவே நிரூபித்து இருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து மனதில் நிற்கிறார் பாலாஜி சக்திவேல். ஓய்வு பெற போகும் சீனியர் போலீஸ் அதிகாரியாக அவருடைய எதார்த்த நடிப்பு பாராட்டுக்களை பெறும். படத்தின் ஐகான் கேரக்டர் என்றால் குழந்தை கடத்தும் வயதான பெண்மணி சாந்தகுமாரிதான் . இதற்கு முன்பு பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஆங்காங்கே தென்பட்டாலும் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும்.
"அத்தனை குழந்தைகளுக்கு நான் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கேன் " என வீராப்பாக வசனம் பேசும் இடத்தில் அரங்கம் கைதட்டலில் நிறைகிறது.
"செஞ்ச தப்புல இருந்து தப்பிச்சோம்னு நினைக்க கூடாது. தண்டனைக்கான காலம் தள்ளிப்போகுதுன்னு அர்த்தம் " என்கிற மிக முக்கிய மெசேஜ் உடன் கதையை விறுவிறுப்பாகவும், சலிப்பூட்டாமலும் எழுதிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் மற்றும் எழுத்தாளர் அதிஷா இருவருக்கும் நிச்சயம் பாராட்டுகள். சாதாரண ஃபேமிலி படமாக துவங்கி திரில்லர், இன்வெஸ்டிகேஷன், தேடல் என இங்கும் திரைக்கதை நம்மைக் காத்திருக்க விடாமல் ஓடுகிறது.
பார்த்திபன் டி. எஃப் டெக் ஒளிப்பதிவில் சிறு சிறு சறுக்கல், தேடல் காட்சிகள் என நம்மையும் சேர்த்து கதைக்குள் கூட்டிச் செல்கிறது. சாபு ஜோசப் எடிட்டிங் படத்தை மேற்கொண்டு வேகமாக நகர்த்தியிருக்கிறது. குறிப்பாக முதல் பாதி சட்டென முடிந்து இடைவேளை வருவது படத்துக்கு பெரிய பலம். சத்ய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹைஹரன், சாஹி சிவா, பிரவின் சைவி, அனல் ஆகாஷ் ஆகிய ஃபைவ் ஸ்டார் இசையமைப்பாளர்கள் திறமையால் ஐந்து பாடல்கள் புது முயற்சி. எனினும் இன்னும் கொஞ்சம் டிரெண்டாகும் பாடல்கள் கொடுத்திருக்கலாம். ஜிப்ரான் பின்னணி இசை அருமை.
குழந்தை பேறு என்பது எவ்வளவு பெரிய கமர்சியல் மார்க்கெட்டாக மாறியிருக்கிறது, அதில் குழந்தை கடத்தல் எதற்காக என்பதற்காக இன்னும் அதிர்ச்சி தரும் காரணங்களை அடுக்கிய விதம் புதிய எச்சரிக்கை மணிகளை அடிக்கிறது.
கடவுள் பக்தி, அதே இடங்களுக்கு வரும் காட்சிகள் என இவை மட்டும் கொஞ்சம் லாஜிக் இடையூறாக இருப்பினும் அதுதான் குடும்ப ஆடியன்சை ஈர்க்கும் ஹைலைட்.
மொத்தத்தில், விறுவிறுப்பான கதையோட்டம், அதில் சமூகத்துக்கான மெசேஜ், குடும்ப ஆடியன்ஸ்க்கான எமோஷன், வேகமாக நகரும் கதைக்களம், என முழுமையான பேக்கேஜாக மாறி மனதில் இடம் பிடித்திருக்கிறது டி.என்.ஏ திரைப்படம்.
Rating: 3.5 / 5.0
Showcase your talent to millions!!
தமிழ் Movie Reviews






Comments