டயட் இல்லாமல் உடல் எடையை குறைக்க… சில எளிய டிப்ஸ்!

  • IndiaGlitz, [Wednesday,October 27 2021]

உடல்எடையை குறைக்க வேண்டும் என்பது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு கனவு. அதாவது உடல்எடையை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்கும். ஆனால் குறைப்பதற்கு எந்த மெனக்கெடலும் செய்யமாட்டோம். இதனால் கடைசிவரை உடல்எடை குறையாமல் திட்டமிட்டுக் கொண்டே இருப்போம்.

இந்நிலையில் எந்த மெனக்கெடலும் இல்லாமல் உடல்எடையை குறைப்பதற்கு சில எளிய வழிமுறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது உணவு பழக்க வழக்கங்களில் சில நடைமுறைகளை பின்பற்றும்போது உடலிலுள்ள அதிகபடியான கொலஸ்ட்ராலை தவிர்க்க முடியும் என்பதே அவர்களின் கருத்து.

1.சாப்பிட்டவுடன் எக்காரணம் கொண்டும் குளிர்ந்த தண்ணீர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், ஐஸ் போட்ட பழச்சாறு, ஃபலூடா, மில்ஷேக் போன்றவற்றைச் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் சாப்பிட்ட உணவு முழுமையாக ஜீரணம் ஆகாது. கூடவே எண்ணெய் போன்ற பொருட்கள் நம்முடைய குடலில் ஒட்டிக் கொண்டு கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி விடும்.

2. சாப்பிட்டவுடன் வெதுவெதுப்பான தண்ணீரை பருக வேண்டும். இந்தத் தண்ணீர் நாம் சாப்பிட்ட உணவுகளை எளிதாக ஜீரணம் செயவதற்கு உதவும். மேலும் இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றுவதற்கு உதவும். மேலும் ஆரோக்கியமில்லாத உணவுகளை நாம் சாப்பிடும்போது உடலில் தேங்கும் மாசுகளையும் இது அகற்றுகிறது. எனவே சாப்பிட்டவுடன் சிறிதளவு சுடு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

3.ஒரு சிலர் சாப்பிட்டவுடன் எதையாவது சாப்பிட வேண்டும் என்பதற்காக இனிப்பு வகைகளை எடுத்துக் கொள்கின்றனர். இதுவும் சில நேரங்களில் பாதகமாக முடிந்துவிடலாம். அதாவது உடலில் உள்ள இன்சுலின் அளவு சீரற்று இருப்பதற்கு இனிப்பு ஒரு முக்கியக் காரணம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எனவே உடலுக்குத் தேவையான அளவு மட்டுமே இனிப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி சாப்பிட்டவுடன் சம்பிரதாயத்திற்காக இனிப்பு சாப்பிடுதை நிறுத்திவிடலாம்.

4.இனிப்பு கலந்த பெருஞ்சீரக மிட்டாய் பெரும்பாலான உணவகங்களில் வைக்கப்பட்டு இருக்கும். உண்மையில் இது வரவேற்கத் தக்கது. காரணம் பெருஞ் சீரகத்திற்கு கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை இருக்கிறது. கூடவே உணவுப் பொருட்களை எளிதாக ஜீரணம் செய்வதற்கும் இது உதவுகிறது. இன்சுலின் அளவை சீராக்குவதற்கும் இந்த பெருஞ் சீரகம் பெரும் உதவியாக இருக்கிறது. எனவே பெருஞ் சீரகத்தை வெறுமனே வாயில் போட்டு மென்று சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.

5. ஒருநபரின் உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் 8 மணிநேர தூக்கம் அவசியம். அந்த வகையில் இரவு 10- காலை 6 மணிவரை தூங்கும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்க வேண்டும். அப்படி தூங்கும்போது மூளையும் உடல் உறுப்புகளும் ஓய்வெடுக்க முடியும்.

6. உணவு விஷயத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான டிப்ஸ், இரவு நேரத்தில் குறைந்த அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். காரணம் நாம் உறங்கும்போது உடலுழைப்பு எதுவும் இல்லாமல் உறுப்புகள் அனைத்து ஓய்வெடுக்கின்றன. இதனால் செரிமான கோளாறு ஏற்படுகிறது. கூடவே செரிமான பிரச்சனையால் உடலில் நச்சுத் தன்மையும் ஏற்படுகிறது. எனவே குறைந்த மற்றும் எளிதாக ஜீரணம் ஆகும் உணவு வகைகளை இரவு நேரத்தில் சாப்பிடலாம்.

7. இரவு உணவை குறைந்தது 7.30 மணிக்கு முன்பே சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். காரணம் இரவு உணவு செரிமானத்திற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.

8. உங்களது செரிமான அமைப்பிற்கு அவ்வபோது ஓய்வுக்கொடுக்க வேண்டும். அதாவது ஒருநாளில் 3 வேளையும் நாம் சாப்பிடுகிறோம். இதைத்தவிர அடிக்கடி நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். இதனால் செரிமான அமைப்பிற்கு ஓய்வே இல்லாமல் அதில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே 3 வேளை உணவிற்கு மத்தியில் நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது நல்லது. ஒருவேளை நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் உணவைக் குறைத்துக் கொண்டு நொறுக்குத் தீனிகளை உட்கொள்ளலாம். இதனால் செரிமான அமைப்பிற்கு சிறிது வேலை குறையும்.

9. அடுத்து ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதுவும் சரிவிகிதத்தில் எடுத்துக் கொள்வதை உறுதிச்செய்ய வேண்டும். அதேபோல பருவகாலத்திற்கு ஏற்ப உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். கோடை காலத்தில் ஊட்டச்சத்து அதிகமாகத் தேவைப்படும் என்பதால் புரதம் நிறைந்த பருப்பு, நட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். கோடை காலத்தில் குளிர்ச்சி நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடலாம்.

10. உடல்எடை குறைப்பில் நடைப்பயிற்சியும் அவசியம். ஒரு நாளில் குறைந்தது 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி அவசியம். அதேபோல சாப்பிட்டவுடன் படுத்து உறங்குவது அல்லது படுத்துக் கொண்டு டிவி பார்ப்பது போன்ற விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.