சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு… அதிரடி காட்டும் தமிழக முதல்வர் எடப்பாடி!
- IndiaGlitz, [Monday,January 18 2021]
சென்னையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “சென்னையில் வீடு இல்லாதவர்களுக்கு அதிமுக அரசு வீடு கட்டிக் கொடுக்கும். அதிமுக சட்டத்தின் கட்சி, நில அபகரிப்பு, கட்டப் பஞ்சாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அரசு. அதிமுக-வை வெல்லும் சக்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இல்லை. ஊழலால் கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. அதிமுக அரசின் மீது வேண்டுமென்றே பழி சுமத்துகிறார் ஸ்டாலின்” எனப் பேசியுள்ளார்.
மேலும் எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்தால்தான் தமிழகத்தில் கட்சி தொடங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. அந்த அளவிற்கு ஆலமரம் போல பரந்து விரிந்து இருக்கும் அதிமுக கட்சி தமிழகத்திற்கு நன்மையையே வழங்கி வருகிறது என்று பேசினார். இந்நிலையில் சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் வீடு இல்லாதவர்களுக்கு படிப்படியாக வீடு கட்டித்தரப்படும் என்ற புதிய வாக்குறுதியை அவர் வழங்கி உள்ளார்.
சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்த நாள் தின பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் எம்.ஜி.ஆரின் வாரிசு அதிமுக தான் என்றும் இன்று கட்சி தொடங்குபவர்கள் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காமல் கட்சி தொடங்க முடியாத நிலை உள்ளதாகவும் கூறியுள்ளார். சிறு வயதிலேயே வறுமையை உணர்ந்து வளர்ந்ததால் வறமையில் இருப்பவர்களின் தேவை அறிந்து அவர்கள் கேட்காமலேயே உதவிகளை செய்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர். என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூடி உள்ளார்.
மேலும் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது என்ன செய்து இருக்கிறார் என வினவிய முதலமைச்சர் திமுக ஆட்சியமைக்கும் என ஸ்டாலின் கனவு கண்டு கொண்டு இருப்பதாகவும் விமர்சித்து உள்ளார்.