close
Choose your channels

ரூ.20 கோடி வரி ஏய்ப்பா? ஐடி ரெய்டு குறித்து விளக்கம் அளித்த நடிகர் சோனு சூட்!

Monday, September 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழில் வெளியான “நெஞ்சினிலே”, “மஜ்னு”, “சந்திரமுகி“, “அருந்ததி“ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் ஒரு தேர்ந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சினிமா மூலம் இவர் பிரபலமானதைவிட கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு உதவிசெய்ததன் மூலம் ஒரு நிஜ ஹீரோவாகவே மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டார். பல லட்சக்கணக்கான ஏழை தொழிலாளர்களை ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது, வெளிநாட்டில் இருந்த மாணவர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தது, ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியது, ஏழை மாணவர்களுக்கு இலவச செல்போன், சொந்தமாக செல்போன் டவர், ஏழை விவசாயிக்கு டிராக்டர் என்று இவருடைய நன்கொடைகள் நீண்டு கொண்டே இருந்தது.

இந்நிலையில் நடிகர் சோனு சூட் அரசியலுக்கு வரப்போகிறார். அதனால்தான் இதுபோன்ற காரியங்களை செய்து கொண்டிருக்கிறார் என்பது போன்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டன. இந்தே தருணத்தில் டெல்லி அரசு, நடிகர் சோனு சூட்டை பள்ளிக் குழந்தைகளுக்கான வழிகாட்டு விளம்பரத் தூதராக நியமித்தது. இதனால் நடிகர் சோனு சூட் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து பணியாற்றப் போகிறார் என்பது போன்ற தகவல்களும் கூறப்பட்டன.

இந்நிலையில் நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் ஆரம்பித்த தனது அறக்கட்டளை மூலம் ரூ.20 கோடிக்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்துள்ளார் எனக் கூறிய வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக நடிகர் சோனு சூட்டிற்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த சோதனையின் முடிவில் அவர் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை மீறி ஒரு கிரவுண்ட ஃபண்டிங் தளத்தின் மூலம் ரூ.2.1 கோடி நன்கொடையை பெற்றுள்ளார் என்ற குற்றச்சாட்டை வருமான வரித்துறையினர் முன்வைத்துள்ளனர். மேலும் நடிகர் சோனு சூட்டின் அறக்கட்டளை ரூ.18 கோடிக்கு மேல் நன்கொடையை சேகரித்தது. இதில் ரூ.1.9 கோடி மதிப்புள்ள நிவாரணப் பணிகளை மட்டுமே செய்துள்ளது. இதனால் ரூ.17 கோடி மீதத் தொகை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் ஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள நடிகர் சோனு சூட், “என்னுடைய ஒவ்வொரு ரூபாயும் விலை மதிப்புள்ள உயிர்களைக் காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறது. நீங்கள் எப்போதும் உங்கள் பக்கத்தை சொல்ல வேண்டியதில்லை. நேரம் வரும். நான் எனது முழு இதயத்துடன் இந்திய மக்களுக்கு சேவை செய்ய உறுதியளித்துள்ளேன். நான் ஒரு சில நாட்களாக சில விருந்தினர்களை சந்தித்தேன். அதனால் தொடர் சேவையில் இருக்க முடியவில்லை. இதோ இப்போது மீண்டும் சேவைக்கு வந்துள்ளேன்” என்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் நடிகர் சோனு சூட் மீதான ரெய்டு குறித்து சிவசேனா கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் கேள்வி எழுப்பி இருந்தன. இதற்கு ஆம் ஆத்மி கட்சியுடன் சோனு சூட் இணைவதற்கும் வருமான வரித்துறை சோதனைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக விளக்கம் அளித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.