தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் ஜுன் 7 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீடிக்கலாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்து இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு விதிமுறைகள் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஊரடங்கு நாட்களில் மதியம் 12 மணி வரை அத்யாவசியக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் எகிறத் தொடங்கியது. இதனால் மே 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு விதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கொரோனா நோய்ப்பரவல் சற்று தணிந்தது. ஆனால் முழுவதுமாக கொரோனா நோய் குறைய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து தளர்வுகளற்ற ஊரடங்கு ஜுன் 7 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. தற்போது இந்த ஊரடங்கும் முடிவடையும் நிலையில் ஊரடங்கு விதிமுறைகளைத் தளர்த்துவது குறித்த சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவ வல்லுநர் குழு தமிழகத்தில் சில பகுதிகளில் கொரோனா நோய்ப் பரவல் அதிகமாக உள்ளது. எனவே மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டிக்கலாம் எனப் பரிந்துரைத்தனர். இதையடுத்து கொரோனா பரவல் அதிகமாக உள்ள மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு விதிமுறைகள் தொடரும் என்றும் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில் மட்டும் சில விதிமுறைகளில் மாற்றங்களை எதிர்ப்பார்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நாளை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.