டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டுபிளெசி ஓய்வா?

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி வீரருமான ஃபாப் டுபிளெசிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போட்டி தள்ளி வைக்கப்பட்டதை அடுத்து இந்த அதிரடி முடிவை அவர் வெளியிட்டு இருக்கிறார். ஆஸ்திரேலிய டெஸ்ட் மேட்சில் பங்கு கொள்வார் எனக் கருதப்பட்ட நிலையில் அத்தொடர் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

36 வயதாகும் டுபிளெசி இதுவரை 69 டெஸ்ட் கிரிக்கெட்டில் கலந்து கொண்டு தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடி இருக்கிறார். இதில் அதிகப் பட்சமாக 199 ரன்கள் எடுத்து இரட்டை சதத்தை நழுவவிட்டார். இதுவரை 10 சதம், 21 அரை சதம் குவித்த டுபிளெசி டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,163 ரன்களை எடுத்து 40.02 சராசரியை தக்க வைத்து உள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக முதன் முதலில் கடந்த 2012 இல் ஆஸ்திரேலியா அடிலெய்ட்டில்  களம் இறங்கிய டுபிளெசி முதல் போட்டியிலேயே சதம் விளாசினார். அடுத்து 2016 முதல் தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாகவும் செயல்பட்டார். இவர் கேப்டனாக இருந்த 36 போட்டிகளில் 18 வெற்றி மற்றும் 15 தோல்விகளை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து கடந்த 2020 ஜனவரியில் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார்.

தற்போது “புதிய அத்தியாயம் தொடங்க என் இருதயம் தெளிவாக உள்ளது, நேரமும் சரியாக உள்ளது” எனத் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு உள்ள டுபிபௌசி தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இதுவரை தென் ஆப்பிரிக்க அணிக்காக 143 ஒருநாள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் டி20 உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.