போலீஸ் உடையில் சென்று இளம்பெண்ணை மிரட்டிய கள்ளக்காதலி: சென்னையில் பரபரப்பு
சென்னை தி நகர் ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவரை போலீஸ் உடையில் மிரட்டிய பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையை சேர்ந்த சுபாஷினி என்ற பெண் தி. நகர் ரயில்வே நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் கிஷோர் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் நாளடைவில் நட்பு ஏற்பட்டு பின்னர் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
ஆனால் ஏற்கனவே கிஷோர், வதனி என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிஷோர், சுபாஷினியுடன் காதல் கொண்டதால் வதனியை தவிர்க்க முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வதனி, சுபாஷினியை மிரட்ட திட்டமிட்டார்.
இதனையடுத்து தனது தோழிகள் தமிழ்ச்செல்வி மற்றும் முத்துலட்சுமி ஆகிய இருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு மூவரும் பெண் போலீஸ் போல் வேடமிட்டு தி. நகர் ரயில் நிலையத்தில் சுபாஷினியை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்த சுபாஷினி தி நகர் ரயில் நிலையத்திலேயே பயத்தில் அலறியுள்ளார்.
அப்போது அங்கு வந்த நிஜ போலீசார் சுபாஷினியிடம் என்ன நடந்தது என்று கேட்க, அவரை மிரட்டிய போலீஸ் உடையில் இருந்த மூவரும் நைசாக தப்பித்தனர். ஆனால் இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் மூவரையும் கண்டுபிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது கிஷோருடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும் ஆனால் அந்த தொடர்பு, சுபாஷினியின் காதலால் முறிந்துவிட்டதாகவும், இதனால் சுபாஷினியை மிரட்ட போலீஸ் வேடம் போட்டதாகவும் அதற்காக துணைக்கு தோழிகள் இருவரையும் அழைத்து கொண்டு வந்ததாக வதனி கூறினார். இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.