15 வருஷமா துணையை திரும்பிக்கூட பார்க்காத மலைப்பாம்பு… 7 முட்டைகள் ஈன்ற விசித்திர சம்பவம்!!!

  • IndiaGlitz, [Saturday,September 12 2020]

 

அமெரிக்காவில் கடந்த 15 வருடங்களாக எந்த ஆண் மலை பாம்புடனும் தொடர்பே இல்லாத பெண் மலைப்பாம்பு ஒன்று 7 முட்டைகளை ஈன்ற விசித்திரச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது. மிசௌரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் விலங்குகாட்சி சாலையில் இருக்கும் இந்த மலைப்பாம்பு, ஆண் துணையே இல்லாமல் எப்படி முட்டைகளை ஈன்றது என அங்குள்ள ஊழியர்களே ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள நிபுணர்கள், சில ஊர்வன விலங்குகள் பாலுறவு கொள்ளாமல்கூட இனப்பெருக்கம் செய்யும் தன்மைக் கொண்டவை எனக் கூறியுள்ளனர். அதுவும் குறிப்பிட்ட வயதுவரை மட்டுமே சாத்தியம் ஆனால் தற்போது 62 வயதான மலைப்பாம்பு துணையே இல்லாமல் 7 முட்டைகளை ஈன்றது குறித்து நிபுணர்களும் தங்களது ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் சில குறிப்பிட்ட வகை மலைப்பாம்புகள் விந்தணுக்களை ஆண்டு கணக்கில் சேமித்து வைக்குமாம். ஆனால் தற்போது 7 முட்டைகளை ஈன்று இருக்கிற ராயல் பைத்தான் அல்லது பால் பைத்தான் இனவகையைச் சேர்ந்த இந்த மலைப்பாம்பு அப்படியான இயல்பு கொண்டதல்ல எனவும் நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் பந்து மலைப்பாம்புகள் வழக்கமாக 60 வயதிலேயே முட்டையிடுவதை நிறுத்திவிடும். ஆனால் 62 வயதில் இது எப்படி சாத்தியமானது என்றும் நிபுணர்கள் தங்களது சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

கடந்த ஜுலை 23 ஆம் தேதி இந்த மலைப்பாம்பு 7 முட்டைகளை ஈன்றது என்றும் அவற்றில் 2 உயிரோடு இல்லை என்றும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 2 முட்டைகள் மரபணு மாற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் 3 முட்டைகள் தற்போது இன்குபேட்டரில் வைக்கப்பட்டு இருப்பதகாவும் கூறப்படுகிறது. இந்த முட்டைகள் ஒரு மாதத்தில் குஞ்சு பொறிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மரபணு மாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட முட்டைகளை ஆராய்ந்தால் பாலியல் ரீதியில் இனப்பெருக்கம் செய்யப்பட்டதா அல்லது அசாதாரணமான முறையில் இனப்பெருக்கம் ஆனதா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் எனவும் கூறப்படுகிறது.

இந்த மலைப்பாம்பை கடந்த 1961 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் ஒருவர் மிருகக்காட்சி சாலைக்கு நன்கொடை அளித்தாகவும் தகவல் கூறப்படுகிறது. கடந்த 2009 இல் இது சில முட்டைகளை இட்டதாகவும் அதில் ஒன்றுகூட உயிரோடு இல்லை என்றும் மிருகக்காட்சி ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதற்குமுன் கடந்த 1990 இல் சில முட்டைகளை ஈன்றதாகவும் கூறப்படுகிறது. இந்த இரு தடவைகளிலும் பாலுறவு ரீதியிலேயே மலைப்பாம்பு முட்டைகளை இட்டதாகவும் ஊழியர்கள் தகவல் அளித்துள்ளனர்.