நெல்லை மாவட்ட அரசு பள்ளியில் தொடங்கப்பட்ட ரோபாட்டிக் ஆய்வகம்..! தமிழகத்திலேயே முதல்முறை.

  • IndiaGlitz, [Friday,January 10 2020]

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. முன்மாதிரிப் பள்ளியாகத் திகழும் இந்தப் பள்ளியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் முயற்சியின் காரணமாக ஆண்டுதோறும் அரசு பொதுத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்கள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.

செஞ்சிலுவைச் சங்கம், முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர்-ஆசிரியர் கழகம் மற்றும் வள்ளியூர் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் இந்தப் பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து வருகின்றனர். தனி நபர்கள் சிலரும் தங்களின் பங்களிப்பாக இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவிவருகிறார்கள்.

வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரான ஸ்டீபன் ஜெயராஜ் என்பவர் தன் தந்தையும் இந்தப் பள்ளியில் முன்னர் ஆசிரியராகப் பணியாற்றியவருமான நவமணியின் நினைவாக ஒரு கோடி ரூபாய் மதிப்பில் டிஜிட்டல் நூலகம் அமைத்துக் கொடுத்திருந்தார். தற்போது இந்தப் பள்ளிக்காக ரோபோட்டிக் ஆய்வகம் அமைத்துத் தந்திருக்கிறார். நாடோடி இனக் குழந்தைகள் உள்ளிட்ட பின்தங்கிய மாணவர்கள் பயிலும் இந்தப் பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கின்றன. அதனால் இங்கு தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கப் பெற்றோர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பள்ளியில் அமைக்கப்பட்ட ரோபோட்டிக் ஆய்வகத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் திறந்து வைத்துப் பேசுகையில், மாணவர்களைத் தேர்வுக்கு மட்டும் தயார்படுத்தாமல் சமூக அக்கறை கொண்டவர்களாகவும் ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். மாணவர்களிடம் புதைந்து கிடக்கும் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வர வேண்டும். அத்தகைய முயற்சிக்கு இந்த ஆய்வகம் பயனுள்ளதாக அமையும் என்றார்.