துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப்பெண் உள்ளிட்ட 5 பேர் படுகொலை… துயரச் சம்பவம்!

  • IndiaGlitz, [Monday,January 25 2021]

அமெரிக்காவின் இண்டியானோபோலிஸ் பகுதியில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில வருடங்களாக துப்பாக்கிச் சூடு, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து இருக்கும் அமெரிக்காவில் இது ஒரு வெகுஜனப் படுகொலை என்று அம்மாநகர மேயர் ஜோ ஹாக்செட் தெரிவித்து இருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 4.40 மணிக்கு இண்டியானோபோலிஸ் நகரத்தின் போலீஸாருக்கு ஒரு சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல் வருகிறது. அதையடுத்து அந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது குண்டடிப்பட்ட ஒரு சிறுவனைக் கண்டுபிடித்து உள்ளனர். ஆனால் அந்த வீட்டில் மேலும் 4 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு இருப்பதைப் பார்த்து அதிர்ந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையிலும் சேர்த்து உள்ளனர். அதில் கெஸ்ஸி சில்ட்ஸ் (42), ரேமண்ட் சில்ட்ஸ் ஜுனியர் (42) இவர்களது 18 வயது மகள் எலியா சில்ட்ஸ் ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இன்னொரு மகள் ரீட்டா சில்ட்ஸ் (13) மட்டும் உயிருடன் இருந்திருக்கிறார்.

மேலும் கர்ப்பிணி பெண் கியாரா ஹாக்கின்ஸ் (19) உயிரிழந்த நிலையிலும் போலீசார் அவர் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். ஆனால் வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்த மருத்துவர்கள் 13 வயது ரீட்டாவும் உயிரிழந்து விட்டதாகக் கூறியுள்ளனர். இச்சம்பவம் அமெரிக்காவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து, இது ஒரு வெகுஜன படுகொலை, சமீபக்காலத்தில் நடைபெற்ற பயங்கரம் மற்றும் இது ஒரு திட்டமிட்ட படுகொலை எனப் பல குற்றச்சாட்டுகளை அம்மாநகர மேயர் ஜோ ஹாக்செட் தெரிவித்து உள்ளார்.