close
Choose your channels

பிளாஷ் பேக்: 1962 இல் இந்தியா, சீனா எல்லைப்போர்!!! நடந்தது என்ன???

Friday, May 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிளாஷ் பேக்: 1962 இல் இந்தியா, சீனா எல்லைப்போர்!!! நடந்தது என்ன???

 

சில நாட்களாக இந்திய எல்லைப் பகுதிகளில் கடும் பதட்டம் நிலவி வருவதை நாம் ஊடகங்களில் பார்த்துக் கொண்டு வருகிறோம். இதற்கு ஆரம்பக் காரணம் எங்கிருந்து வந்தது என்றால் சிலர் 1962 ஐ கை நீட்டிக் காட்டுகிறார்கள். அப்படி என்னதான் நடந்தது 1962 இல்? எதற்காக ஊடகங்கள் இந்த ஆண்டை திரும்ப திரும்ப சொல்லிக் காட்டுகின்றன எனப் பார்க்க வேண்டியிருக்கிறது.

காஷ்மீர் பகுதியில் இருக்கும் அக்சய்சன் என்ற இடம் தான் தற்போது இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையே இருக்கும் நேரடியான பிரச்சனை. மற்றக் காரணங்கள் எதுவும் நேரடியான அரசியல் அல்ல, அது சர்வதேச அரசியல் சூழல் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். லடாக்கை ஒட்டி பாங்காங் என்று ஒரு ஏரிப் பகுதி இருக்கிறது. இந்த ஏரிப் பகுதிதான் சீனா மற்றும் இந்தியாவின் எல்லைக் கோடாகக் கருதப்பட்டு வருகிறது. தற்போது இந்த ஏரிப்பகுதியில் இந்தியா சில சாலைகளையும், சில பாலங்களையும் கட்டியிருக்கிறது. இந்த சீரமைப்பு பணிகள் அனைத்தும் கொரோனா பரவல் ஆரம்பித்த நேரத்தில் இருந்தே நடைபெற்று வருகின்றன. இந்தக் காரணங்கள்தான் சீனாவை கடும் கோபத்திற்கு ஆளாக்கியிருப்பதாக சீன அதிபரே தெரிவித்து இருக்கிறார்.

கடந்த வாரத்தில், சீனா எல்லைப் பகுதியில் வீரர்களைக் குவிக்க ஆரம்பித்த வுடன் நமது நாட்டு இராணுவம் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. அப்படி நடத்தப்பட்ட எந்த பேச்சு வார்த்தையும் வேலைக்கு ஆக வில்லை. ஆனால் சீன அதிபர் பொது வெளியில் தோன்றி, “இந்தியா எல்லைப் பகுதியில் எந்த சீரமைப்பு பணியையும் செய்யக் கூடாது” எனக் கடுமையாக எச்சரித்தார். அதற்குப் பிறகு நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் பலனளித்தது என்பதும் ஓரளவிற்கு எல்லைப் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது என்பதும் இப்போதைய கதை. ஆனால் இரண்டு நாட்டு அதிகாரிகளிடம் முடிவு எப்படியிருக்கும் என்ற பயம் உள்ளூற இருக்கத்தான் செய்கிறது. ஏன் இப்படி உள்ளூற பயம். பேச்சு வார்த்தை நடந்து வருகிறது, சீனா பேச்சு வார்தையை மீறியும் படையெடுத்து வருமா என்ன? நாம் யதார்த்தமாக கேட்கலாம். ஆனால் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரச்சனையில் இப்படி சுமூகமான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தப் படவில்லை. சீனா கடுமையான போருக்கு ஆயத்தமாகி வருகிறது என்பதை அறியாமலே இந்தியா, அதோடு போரிட்டு படுதோல்வியைத் தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த பழைய எச்சரிக்கை உணர்வுதான் தற்போது வரையிலும் உள்ளூற இருந்து கொண்டே இருக்கிறது.

1962 இல் இந்தியாவில் ஜனநாயகத்தை மிகவும் விரும்பிய ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார். சீனாவில் பொதுவுடைமைக் கொள்கையினால் மக்களிடம் பெரும் தலைவராக அறியப்பட்ட மாசேதுங் அதிபராக பொறுப்பு வகித்தார். காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த அக்சய் சன் பகுதியில் சீனா இராணுவப் போக்கு வரத்துக்காக சாலையை அமைத்து வந்தது. அந்தப் பணியை தடுத்து நிறுத்தும் விதமாக இந்தியா அந்தப் பகுதியில் காவல் சாவடிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அவ்வளவுதான். சீனா அனைத்து எல்லைப் பகுதியிலும் இராணுவ வீரர்களைக் குவிக்க ஆரம்பித்து விட்டது. அப்போதைய நிலைமையில் சீனாவிற்கு இந்தியா மட்டும் அல்ல, ரஷ்யாவோடும் கடும் பிரச்சனை நிலவி வந்தது. அது கியூபாவை பற்றிய விவகாரம். அந்த விவகாரம் சீனாவிற்குப் பெரும் தலைவலியாக இருக்கும். சீனா போருக்கு எல்லாம் வராது. அதோடு ரஷ்யா வெளியிட்ட பத்திரிக்கையில் சீனாவும் இந்தியாவும் நட்பு நாடுகள் என்று பல கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருந்தன. இப்படி நட்பு பாராட்டும் ஒரு நாடு எப்படி நம் மீது போருக்கு வரும் என்று இந்தியா சற்று பொறுமை காத்துவிட்டது.

1962 அக்டோபர் 20 ஆம் தேதி சீனா லடாக்கின் எல்லைப் பகுதியில் இருந்து போர் வீரர்களை இந்திய எல்லைக் கோட்டின் வடக் கிழக்கு பகுதி வரைக்கும் குவிக்க ஆரம்பித்து விட்டது. இந்த பகுதி மக்மோகன் கோடு எனவும் அழைக்கப் படுகிறது. குறைந்த எண்ணிக்கையில் இருந்த இந்திய போர் வீரர்களால் அவர்களைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஏனெனில் இந்தியா போருக்கு தயாராகவே இல்லை. போர் வரும் எனக் கற்பனையிலும் நினைக்கவில்லை. சீன வீரர்கள் தங்களை நோக்கி ஆயிரக்கணக்கில் வருகிறார்கள். அவர்களை எதிர்கொள்ள முடியாமலும் பின்வாங்க முடியாமலும் இந்திய வீரர்கள் திணறுகின்றனர். அங்கிருந்து இராணுவத்திற்கு எச்சரிக்கை செய்யவும் முடியவில்லை. சீனா தொலைத் தொடர்பு சாதனங்களையும் முற்றிலுமாக அழித்து விட்டது. இப்படி தொடர்ந்த போர் சரியாக ஒரு மாதம் அதாவது நவம்பர் 21 வரை நீடித்தது. கடைசியில் இந்தியா படு தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப் பட்டது.

சீனாவின் தரப்பில் இருந்து குறைந்தது 80 ஆயிரம் இராணுவ வீரர்களும் இந்தியா தரப்பில் 10 இல் இருந்து 20 ஆயிரம் இராணுவ வீரர்களும் பங்கு பெற்றதாக கூறப்படுகிறது. இந்திய போர் வீரர்கள் 1383 உயரிழந்தனர். சீன வீரர்கள் 722 பேர் இறந்து போயினர். அதோடு 3900 இந்திய இராணுவ வீரர்கள் பிணை கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அப்போதைக்கு தரை அளவில் மட்டுமே போர் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இப்போது இருக்கும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப ஒரு மாதம் போர் நடைபெற்று இருந்தால் இரண்டு நாடுகளுமே தரை மட்டம் ஆகியிருக்கும். 1962 நவம்பர் 21 ஆம் தேதி சீனாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புரிந்துணர்வு அடிப்படையில் போரை நிறுத்துவதாக மா சேதுங் அறிவித்தார். அன்றிலிருந்து எல்லைப் பகுதிக்கு 1962 இல் கையெழுத்தான சட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே இரு நாடுகளும் பின்பற்றி வருகின்றன. அன்றிலிருந்து அக்சய்சன் பகுதி சீனாவின் கைவசமே இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா, வங்கதேசத்துக்கு அடுத்து பெரும் அளவிலான எல்லைப் பகுதியை சீனாவுடன்தான் பகிர்ந்து கொண்டு வருகிறது. சுமார் 3,488 சதுர கிலோ மீட்டர் எனக் கூறப்படுகிறது. 1962 இல் நடந்த போர் சமயத்தில் பாதுகாப்புத் துறையில் இந்தியா மிகவும் பலவீனமாக இருப்பதாக உலக நாடுகள் விமர்சிக்க ஆரம்பித்தன. அதோடு போரை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உதவியை நேரு நாடினார். அவர்கள் எந்த உதவியையும் செய்ய முன்வரவில்லை. எனவே இந்த விவகாரம் உலக அளவில் இந்தியாவின் மதிப்பை குறைக்கவும் செய்தது. இது அரசியல் மட்டத்தில் காங்கிரஸின் படுதோல்வியாக இன்று வரையிலும் பேசப்பட்டு வருகிறது. அதற்குப் பின்பு இராணுவத்தை பலப்படுத்தும் செயலில் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1962 இல் இந்திய பாதுகாப்புத் துறையில் நடந்த சில குழப்பங்களே, சீனாவுடன் இந்தியா தோற்றுப் போனதற்கு அடிப்படைக் காரணம் என்று நேரு அவர்களின் வரலாற்றை எழுதி வெளியிட்ட எஸ். கோபால் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார். அன்றைக்கு பிரதமராக நேரு அவர்களும் ஜனாதிபதியாக எஸ் ராதாகிருஷ்ணனும் பதவி வகித்தனர். அன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய நேரு, இந்தியா போரில் படுதோல்வி அடைந்தது குறித்து “நாங்கள் நவீன உலகின் உண்மையில் இருந்து விலகி இருக்கிறோம். செயற்கையான சூழலில் இருந்தோம்” என்று போரைப் பற்றி எந்த விவரங்களையும் அறிந்து கொள்ளாமல் இருந்து விட்ட நிலையை அவர் ஒப்பு கொள்ளவும் செய்தார்.

பாதுகாப்பு அமைச்சரவை குழப்பங்கள்

1957 இல் நேரு இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக கிருஷ்ண மேனனை நியமித்தார். பாதுகாப்பு துறை அமைச்சரின் அசாதாரணமான நடத்தையால் தான் இந்தியா சீனாவுடனான போரில் தோற்று போனது என்பதை இந்திய மக்களே ஒப்புக் கொள்ளும் அளவிற்கு கிருஷ்ண மேனனின் பங்கு அதிகமாகவே இருந்தது. இவர் உயர்மட்ட அதிகாரி பதவிக்கு தகுதி இல்லாதவர் என்று வெளியேற்றப் பட்ட பி.எம் கௌலை லெப்பிடினன் ஜெனரலாக அறிவித்தார். இப்படி அவசரப்பட்டு நியமிக்கப் பட்ட பதவிதான் பின்னாளில் பெரும் ஆபத்தாக முடிந்தாகவும் கூறப்படுகிறது. பி. எம் கௌல் பின்னாளில் வடகிழக்கு பிராந்தியத்தின் கமமெண்டர் ஆகவும் நியமிக்கப் பட்டார். இந்த முடிவு தவறானது என அப்பொழுது இராணுவத் தளபதியாக இருந்த கே.எஸ். திம்மையா பதவி விலகல் கடிதத்தையும் அளித்திருந்தார். பின்னர் நேருவின் தலையீட்டால் பதவி விலகல் கடிதம் திரும்ப பெறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெப்பிடினன் ஜெனரலாக அறிவிக்கப் பட்ட பி.எம். கௌல் போர் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தோடு சீன இராணுவத்தை அணுகியதாகவும் அப்படி நடத்தப்பட்ட தவறான அணுகுமுறையே போருக்கு வழிவகுத்தது எனவும் கூறப்படுகிறது. எல்லையில் இவர்களின் எந்த அணுகுமுறைப் பற்றியும் பிரதமருக்குத் தெரிவிக்கப் படாமலே இருந்தாகக் கூறப்படுகிறது. காரணம் கிருஷ்ணமேனன் மீது அளவிற்கு அதிகமான நம்பிக்கையை பிரதமர் நேரு வைத்திருந்ததகாவும் சொல்லப்படுகிறது.

இதைத்தவிர, போருக்கான அறிகுறிகள் எல்லையில் தென்படும்போது பி.எம் கௌலுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அந்த நிலையிலும் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த கிருஷ்ணமேனன், அவருக்கு பதிலாக வேறு யாரையும் நியமிக்காமல் அவரை டெல்லிக்கு சென்று வீட்டில் இருந்தே போரை கவனித்துக் கொள்ளலாம் என்ற அனுமதியையும் அளித்திருக்கிறார். இதை அன்றைக்கு இராணுவ தளபதியாக இருந்த பி.எம் தாபர் கடுமையாக எதிர்த்து இருக்கிறார். ஆனால் அந்த எதிர்ப்பு எல்லாம் ஒரு பொருட்டாகவே அமைய வில்லை என்பதையும் வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். போருக்கான எந்த அறிவிப்பு இல்லாமல், தயாரிப்பு எதுவும் இல்லாமல், பெரிய அயுதங்கள் இல்லாமல் அக்டோபர் 20, 1962 இல் சீனா இந்தியாவின் மீது போர்த்தொடுக்க ஆரம்பித்து இருக்கிறது.

இந்த விவகாரத்திற்கு முழுப் பொறுப்பேற்று பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த கிருஷ்ண மேனன், லெப்பிடினன் பி.எம் கௌல் இருவரும் பதவி விலகினர். இவர்களோடு வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.ஜே தேசாய், உளவுத்துறை அதிகாரியாக இருந்த பி.எம். மாலிக், பாதுகாப்புத்துறை அமைச்க இணை செயலர் சரின் ஆகியோரின் பெயர்களும் அடிப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்போது நடைபெற்ற போரில் சீனாவின் கை ஓங்கி இருந்ததையும் இந்தியா பாதுகாப்புத் துறையில் மந்தமாக இருந்ததையும் இன்றைய அரசியல் தலைவர்கள் வரைக்கும் யாரும் மறக்க வில்லை என்பதை கண்கூடாக சில நேரங்களில் பார்க்க முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.