போட்டிக்கு முந்தைய இரவு கொடுமையாக இருக்கும்? மனம் திறந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், தான் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியின் முந்தைய இரவுகளிலும் தான்னால் சரியாக உறங்க முடிந்ததே இல்லை. அவ்வளவு பதற்றத்துடன் இருந்தேன் எனத் தெரிவித்து உள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், இந்தியாவிற்காக 200 க்கும் மேற்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர், அதிக ரன்களைக் குவித்தவர், அதிக சதத்தை அடித்தவர் இப்படி யாராலும் முறியடிக்கவே முடியாத பல சாதனைகளைப் படைத்து இருக்கும் சச்சின் டெண்டுல்கர் அவர்கள் தற்போது டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் கிட்டத்தட்ட 10- 12 ஆண்டுகாலம் ஒவ்வொரு போட்டியின் முந்தைய நாள் இரவும் நான் சரியாக உறங்கியதே இல்லை. அப்படியே தூங்கினாலும் திடீரென விழித்துக் கொள்வேன். என் மூளையில் போட்டி குறித்த எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். படுக்கையில் புரண்டு படுத்தாலும் தூக்கம் சரியாக வராது. ஒரு பதற்றம் இருக்கும்.

பின்பு போட்டிக்கு முன்பாக பதற்றமடைவதால் பயனில்லை. மாறாக அதற்கு ஏற்ப நாம் தயாராக வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன் எனத் தெரிவித்து உள்ளார். மேலும் போட்டிக்கு முந்தைய நாட்களில் டிவி பார்ப்பது, படிப்பது அல்லது வீடியோ கேம் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். அதன்பின்பு போட்டியன்று சிறப்பாக விளையாடினேன்.

அதோடு கிரிக்கெட் என்பது மனம்சார்ந்தது எனப் புரிந்து கொண்டபின்பு நான் பதற்றமாக இருக்கக் கூடாது என முடிவெடுத்தேன் எனக் கூறியிருக்கிறார். 48 வயதான சச்சின் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்று பல இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் போட்டியின்போது பதற்றமாக இருந்தேன் எனக் கூறிய தகவல் தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று இருக்கிறது.