வடிவேலு பேக் டு ஃபார்ம்... சம்மர் வெகேஷன் ட்ரீட் கேங்கர்ஸ் !
ஆவ்னி சினிமாக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் சுந்தர் சி, வடிவேலு, கேத்தரின் தெரசா, பக்ஸ், மைம் கோபி, ஹரிஷ் பேராடி, அருள்தாஸ், முனீஸ் காந்த், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ' கேங்கர்ஸ் ,'.
ஒரு அரசு பள்ளி அதில் ஒரு சிறுமி காணாமல் போகிறார். சிறுமியை மொத்த பள்ளியுடன் இணைந்து தேடுகிறார் டீச்சர் சுஜிதா ( கேத்தரின் தெரசா ) . காவல்துறையிடம் புகார் கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. மேலும் ஊருக்குள் பெரிய தலைக்கட்டுகளாகவும், அரசியல் வாதிகளாகவும் ரவுடிகள். அதே பள்ளிக்கு பிடி டீச்சராக வருகிறார் சரவணன் ( சுந்தர் சி) . சிறுமியை தேடும் முயற்சியில் தோல்வியடையும் சுஜிதா பல ஆபத்துகளையும் சந்திக்கிறார். இதற்கு மறைமுகத்தில் இருந்து உதவி செய்கிறார் சரவணன். இந்நிலையில் திடீரென மாடியிலிருந்து கீழே விழும் இன்னொரு சிறுவன் எனத் தொடர் அசம்பாவிதங்கள் அந்த பள்ளியில் நடக்கின்றன. இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் யார், எதிரிகளை களை எடுத்தார்களா சரவணன் மற்றும் அவருடைய கேங்கர்ஸ் குழு என்பது மீதிக் கதை.
பிடி டீச்சர் கெட்டப்புக்கு ஏற்றார் போல் ஆறடி உயரத்துடன் கச்சிதமாக நிற்கிறார் சுந்தர் சி. மேலும் இந்த படத்திற்காகவே உடலை குறைத்து மேலும் ஃபிட்டாய் இருப்பது தெரிகிறது. பெரும்பாலும் சுந்தர் சி படங்கள் என்றாலே நாயகிகள் கவர்ச்சி , காதல், ரொமான்ஸ், குத்தாட்டம் மட்டுமே பயன்படுத்தப்படுவர். ஆனால் மிகச்சில படங்களில் கதையிலும் பயன்படுத்தப்படுவதுண்டு. அப்படி இந்த படத்தில் இரண்டு நாயகிகள் கேத்ரின் தெரசா மற்றும் வாணி போஜன் . இரண்டு பேருமே கதைக்குள் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் ஒரே ஒரு கவர்ச்சி நடனம் தவிர படம் முழுக்க கேத்ரின் தெரசா புடவையில் வருகிறார். இன்னும் கொஞ்சம் நடிக்க கற்றுக் கொண்டால் நல்லது. எல்லா இடத்திலும் ஒரே முகபாவனை, ஒரே விதமான உடல் மொழி முன்னேற்றம் தேவை. ஆனால் நடனம் எப்போதும் போல தாறுமாறு.
படத்திற்கு மிகப்பெரிய பலம் வடிவேலு. வடிவேலு பேக் டு ஃபார்ம் என்று சொல்லலாம். மீண்டும் அந்த வின்னர், கிரி, தலைநகரம் , போன்ற சில மொமெண்ட்களைக் கொடுத்து அரங்கத்தை சிரிப்பலைகளால் நிறைத்து விட்டனர் வடிவேலு மற்றும் அவருடன் இணைந்த பக்ஸ் , முனிஸ்காந்த், கேங். குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி சீட்டில் சிரித்து உருள விடும்.
வடிவேலுவின் கெட்டப்களும் இந்தப் படத்தில் மிக அற்புதமாகவே கை கொடுத்திருக்கின்றன.
' 50 பேர் இருக்கானுங்க. எவனும் நம்மள பார்க்கல , நீயும் நானும் தான் மாத்தி மாத்தி பார்த்து பயந்துட்டு கிடக்கோம் ' ' உலகம் ஆரம்பிச்ச காலத்துல இருந்து எந்தக் குழந்தையும் பேரு வெச்சு கூப்பிட்ட மூணே நாள்ல திரும்பிப் பார்க்காதுய்யா ' ' அவன் பேரு டெலக்சா... எனப் பல காட்சிகள் காமெடி சேனல்களின் பிளே லிஸ்ட் ரகமாக மாறியிருக்கின்றன.
மைம் கோபி , அருள் தாஸ், ஹாரிஸ் பெறாடி, டெரர் கேங் பல இடங்களில் காமெடியாகவும் பயன்பட்டிருக்கின்றனர்.
கே. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் சுந்தர் சி டிரேட்மர்க் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. பிரவீன் ஆண்டனியின் ஷார்ப் எடிட்டிங் இரண்டாம் பாக காமெடி சரவெடிக்கு கை கொடுத்திருக்கிறது. சி சத்யா இசையில் பின்னணி மிக அருமை. பாடல்களில் இன்னும் சற்று கவனம் கொடுத்திருக்கலாம். கேத்தரின் தெரசா நடனமாடும் கவர்ச்சி பாடல் கூட மனதில் நிற்கவில்லை.
பத்ரி மற்றும் வெங்கட்ரராகவன் காமெடி வசனங்கள் படத்திற்கு மற்றும் ஒரு பலம். லாஜிக் நிறைய இடிக்கும் ஆனால் காமெடி சரவெடிக்கு நடுவே இந்தக் கேள்விகள் எல்லாம் தேவையா என மனம் ஆறுதல் அடைந்து விடும்படியான கலகலப்பான திரைக்கதை.
மொத்தத்தில் எவ்வித சினிமா அறிவுக் கேள்விகளும் இல்லாமல் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடி சிரித்து மகிழ ஒரு கோடைகால விடுமுறை திரைப்படமாக மாறி இருக்கிறது ' கேங்கர்ஸ் ' திரைப்படம் .
Rating: 3 / 5.0
Showcase your talent to millions!!
മലയാളം Movie Reviews






Comments