ஜனாதிபதி அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்ட கமல்-ரஜினி பட நடிகை!

  • IndiaGlitz, [Thursday,January 30 2020]

குடியரசு தினம் கடந்த 26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் அன்றைய தினம் மாலையில் ஜனாதிபதி மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற்றது.

இந்த தேநீர் விருந்தில் மத்திய அமைச்சர்கள் உட்பட முக்கிய விஐபிக்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில் இந்த தேநீர் விருந்தில் கமல் ரஜினி உள்பட பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை கௌதமி பங்கேற்றுள்ளார். தேனீர் விருந்தில் பங்கேற்க கெளதமிக்கு அழைப்பு எப்படி வந்தது என்று புரியாமல் தமிழக பாஜகவினர் குழப்பம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் அதிமுக அனுதாபியாக இருந்த கௌதமி, அதன் பின்னர் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அவர் பாஜக வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக பாஜக பிரமுகர்களுக்கே ஜனாதிபதியின் தேநீர் விருந்துக்கு அழைப்பு கிடைக்காத நிலையில் கௌதமிக்கு மட்டும் எப்படி அழைப்பு கிடைத்தது என்று புரியாத புதிராக உள்ளது. இருப்பினும் மத்திய பெண் அமைச்சர் ஒருவரின் உதவியால் தான் அவருக்கு இந்த அழைப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் விரைவில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டவுடன் கௌதமிக்கு முக்கிய பதவி ஒன்று அளிக்கப்படும் என அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.