நீட் தேர்வில் அராஜகத்தின் உச்சகட்டம். உள்ளாடையை அகற்றி சோதனை செய்த கொடுமை

  • IndiaGlitz, [Monday,May 08 2017]

நேற்று இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வு சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட 8 மாநகரங்களில் நடைபெற்றது.

இந்நிலையில் இந்த தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளை சோதனை என்ற பெயரில் பெரும் அராஜகம் நடந்ததுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பேனா, பென்சில், ரப்பர், வெற்று அல்லது எழுதிய காகிதங்கள், புத்தகம், பேனா பவுச், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பென், கால்குலேட்டர், செல்போன், பேஜர், இயர்போன், தொப்பி, கைப்பை, தோள்பை ஆகிய பொருட்கள் எடுத்து செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சோதனை நடவடிக்கை என்ற பெயரில் தோடு, வளையல் ஆகியவைகளை அகற்றிய சோதனை செய்த அதிகாரிகள் மாணவர்களின் முழுக்கை சட்டைகளை கிழித்து அரைக்கை சட்டையாக்கினர். மேலும் அராஜகத்தின் உச்சகட்டமாக கேரளாவில் உள்ள கண்ணனூர் என்ற தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதாகவும், இதனால் மாணவ, மாணவிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

குற்றவாளிகளை போல மாணவ மாணவிகளை சோதனை செய்து தேர்வுக்கு அனுமதிப்பதை பெற்றோர்கள் உள்பட பலர் கண்டித்தனர். இப்படி ஒரு தேர்வு எழுதி டாக்டர் ஆகவேண்டிய அவசியம் இல்லை என்பது ஒருசிலரின் குரலாக இருந்தது.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வித்திட்டம் இல்லை, ஒரே மாதிரியான கல்வி இல்லை, ஒரே மாதிரியான கல்விக்கூடங்கள், வசதிகள் இல்லை, ஆனால் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு, சோதனை என்ற பெயரில் அராஜகம் ஆகியவை நடந்துள்ளதை சமூக ஆர்வலர்கள் கண்டித்து வருகின்றனர்.