ராகவா லாரன்ஸ் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய குஜராத் முதல்வர்

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் கோடிக்கணக்கில் நிதியுதவி மட்டுமின்றி லட்சக்கணக்கானோர் பசியையும் தனது தாய் அறக்கட்டளை மூலம் போக்கி வரும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி வெளிமாநிலத்தில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கும் அவர் உதவி செய்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு பத்திரிகையாளரின் தாயார் கேரள மருத்துவமனையில் உடல்நலமின்றி காலமான நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த ராகவா லாரன்ஸ், உடனடியாக கேரள முதல்வருக்கு கடிதம் எழுதி, அந்த பத்திரிகையாளரின் தாயார் உடலை தமிழகம் கொண்டு வர ஏற்பாடு செய்தார்.

இந்த நிலையில் நேற்று குஜராத்தில் சிக்கி தவிக்கும் தமிழ்க்குடும்பம் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ராகவா லாரன்ஸ், தமிழக அரசுக்கும், குஜராத் அரசுக்கும் அந்த குடும்பத்தை மீட்க வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த குடும்பத்திற்கு உதவுங்கள் என்றும் தனது பக்கத்தில் இருந்து ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதை செய்ய தயாராக இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் தமிழ்க்குடும்பம் சிக்கி தவிக்கும் ராஜ்கோட் கலெக்டர் அந்த குடும்பத்திற்கு தேவையான அடிப்படை தேவைகள் அனைத்தும் வழங்கப்பட்டதாகவும், அவர்கள் விரும்பினால் தமிழகம் செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்ய குஜராத் அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ராஜ்கோட் கலெக்டருக்கும், குஜராத் முதல்வருக்கும் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.