close
Choose your channels

ஜி.வி.பிரகாஷ் எடுத்த புதிய சபதம்

Monday, September 3, 2018 • தமிழ் Comments

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர், நடிகர் என இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர் ஜி.வி.பிரகாஷ். கோலிவுட்டில் பிசியான நடிகராகவும், இசையமைப்பாளராக இருந்தாலும் அவ்வப்போது சமூக கருத்துக்களை கூறி வருபவர். மேலும் தமிழ்ப்பற்று அதிகம் உள்ளவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று முதல் ஜிவி பிரகாஷ் புதிய சபதம் ஒன்றை எடுத்துள்ளார். அதாவது இனிமேல் தமிழில் மட்டுமே கையெழுத்திடுவேன் என்பதுதான் ஜிவி பிரகாஷின் புதிய சபதம் ஆகும். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ்...இனி புதிய விதி செய்யும் என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் ... #தமிழ்விதியெனசெய் என்று பதிவு செய்துள்ளார். ஜிவி பிரகாஷின் இந்த சபதத்திற்கு பெரும்பாலான இணையதள பயனாளிகள் வாழ்த்துக்களும் ஒருசிலர் கேலியும் செய்து வருகின்றனர்.

ஜிவி பிரகாஷ் தற்போது 'ஐங்கரன்', 'அடங்காதே', 'குப்பத்து ராஜா', '100% காதல்' மற்றும் 'சர்வம் தாளமயம்' போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் 'அடங்காதே' திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது.