பற்றி எரியும் அமேசான் காடுகளுக்காக குரல் கொடுத்த கோலிவுட் நட்சத்திரம்!

  • IndiaGlitz, [Friday,August 23 2019]

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் கடந்த சில நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த தீயை அணைக்க அந்நாட்டு தீயணணப்பு துறையினர் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தால் ஆயிரக்கணக்கான மரங்கள் சாம்பலானதுடன் நூற்றுக்கணக்கான காட்டில் வாழும் விலங்கினங்கள் மடிந்தன.

மனிதர்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை கொடுக்கும் லட்சக்கணக்கான மரங்கள் உள்ள அமேசான் போன்ற காடுகள் தீக்கிரையானால் குடிதண்ணீர் போன்று விரைவில் ஆக்சிஜனையும் விலைக்கு வாங்கி சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்து வருகின்றனர். மேலும் உலகம் முழுவதும் பெய்யும் மழைக்கு 20% அமேசான் காடுகளால்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட பூமியின் இருதயம் என்று கூறப்படும் அமேசான் காடுகளை ஒருசிலர் சுயநலத்திற்காக தீ வைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இதனையடுத்து இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அமேசான் காடுகளை காக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார். பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் அழிந்து கொண்டிருக்கின்றது. அமேசான் காடுகள் மில்லியன் கணக்கான தாவரங்கள், விலங்குகளுக்கு மட்டுமின்றி பழங்குடி மக்களுக்கும் இருப்பிடமாக உள்ளது. கார்பன் டை ஆக்சைடு அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்து கொண்டிருக்கும் அமேசான் காடுகள் அழிந்து கொண்டிருப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது. அமேசான் காடுகளுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்று ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.