நீங்கள் முதலில் நடிப்பதை நிறுத்துங்கள்: பிரபல நடிகரை சீண்டிய எச்.ராஜா!

  • IndiaGlitz, [Wednesday,March 06 2019]

சமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகத்துக்கு உரிய கேள்விகளை முன்வைத்த போது, 'நாம் ராணுவத்தினரை நம்புவதும் நாம் அவர்களை நினைத்துப் பெருமைப் படுவதும் இயற்கையான ஒன்று. ஆனாலும் எனக்கு ஒன்று புரியவில்லை. ஏன் ராணுவப் படையினரை சிலர் கேள்வி கேட்கின்றனர் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ' நம் மக்கள் நம் நாட்டு ராணுவத்துடனும் ராணுவ வீரர்கள் பக்கம்தான் நிற்கிறார்கள். நீங்களும், உங்கள் கும்பலைச் சேர்ந்தவர்களும்தான் நம்புவதில்லை. முதலில் புல்வாமாவை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். நீங்கள் ராணுவ வீரர் இல்லை, அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று பதிவு செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, 'மும்பை தாக்குதலின்போது 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், பலர் காயம் அடைந்தனர். அப்போது இந்திய விமானப்படை பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ஆலோசனை செய்தபோது அப்போதைய காங்கிரஸ் அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஆனா மோடி சர்கார் இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்தார். எனவே ஒரு நடிகர் தேசத்துக்கு எதிராக நடிக்க வேண்டாம் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.