போதைப்பொருள் விவகாரம்… நடிகை சஞ்சனா கல்ராணி சிறைக்கு செல்கிறாரா?

  • IndiaGlitz, [Wednesday,August 25 2021]

பாலிவுட் சினிமா உலகில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னரே போதைப்பொருள் விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியது. ஆனால் இதற்கு முன்பே கன்னட சினிமாவில் கிட்டத்தட்ட 14 சினிமா பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாக மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்ததோடு நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை சஞ்சனா கல்ராணி மற்றும் நடிகை ராகினி திவேதி இருவரையும் கைது செய்து விசாரித்து வந்தனர்.

கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சஞ்சனா கல்ராணி. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான “ஒரு காதல் செய்வீர்” திரைப்படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் “போடா முண்டம்” எனும் திரைப்படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. நடிகை ராகினி திவேதி ஜெயம் ரவி நடிப்பில் வெளியான “நிமிர்ந்து நில்” திரைப்படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இந்நிலையில் நடிகை சஞ்சனா கல்ராணி மற்றும் நடிகை ராகினி திவேதி இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தி வருவதாகவும் அவர்களுக்கு போதைப்பொருள் கும்பலோடு தொடர்பு இருப்பதாகவும் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிரடி விசாரணை நடத்தினர். கூடவே நடிகை சஞ்சனாவின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் கிடைத்த ஆவணங்களை வைத்து இருவரையும் கைதுசெய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

4 மாதம் சிறைத் தண்டனைக்குப் பிறகு இவர்கள் இருவரும் தங்களின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளில் போதைப்பொருள் கலக்கவில்லை என்ற முடிவுகளை காட்டி ஜாமீனில் வெளிவந்தனர்.

அதாவது ஒரு நபர் போதைப்பொருள் உட்கொண்ட 24 மணி நேரங்கள் வரை அவரின் சிறுநீர் மற்றும் ரத்தமாதிரிகளில் போதைப்பொருள் கலந்து இருக்கும். இந்த சோதனையில் தப்பித்துக் கொண்ட நடிகைகள் இருவரும் தற்போது தலைமுடியை வைத்து பரிசோதிக்கப்படும் FSL எனும் சோதனையில் போதைப்பொருள் உட்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது.

நடிகை சஞ்சனா மற்றும் ராகினி திவேதியின் FSL முடிவுகளை வெளியிட்ட மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் இந்த முடிவுகளை விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் நடிகை சஞ்சனா மற்றும் ராகினி திவேதி ஆகிய இருவரும் மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற பரபரப்பு இப்போதே கன்னட திரையுலகில் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

இவர்களை தவிர கன்னட திரையுலகில் முக்கியப் பிரபலங்கள் சிலரும் இந்தப் போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கலாம் என்றும் கருத்துக் கூறப்படுகிறது.