பாட்டுத் தலைவன் பாலசுப்பிரமணியம்: பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Sunday,June 04 2017]

"பாட்டுத்தலைவன் பாடினால் பாட்டு தான்..
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்"

மணிரத்னம் இயக்கிய 'இதயக்கோவில்' படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை யாராவது மறக்க முடியுமா? உண்மையாக எஸ்பிபி பாடிய ஒவ்வொரு பாட்டுக்கும் தாளம் போட்டு ரசிக்கும் கூட்டம் எந்த காலத்திலும் உண்டு. அந்த அளவுக்கு காந்தக்குரலுக்கு சொந்தக்காரராகிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாவட்டத்தில் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தார் பாலசுப்பிரமணியம். தந்தை ஒரு ஹரிஹத கலைஞர் என்பதால் அவருடன் இருந்து சிறுவயதிலேயே சங்கீதம் பெற்றார். சங்கிதத்தை முறையாக பயிலவில்லை என்றாலும் சங்கீதாம் அவரிடம் சரண் அடைந்தது

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பாடல்களால் கட்டி போட்டு வைத்திருக்கும் பாடும் குயில் பாலா பாடிய முதல் பாடல் எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண்' படத்தில் இடம்பெற்ற 'ஆயிரம் நிலவே வா' என்ற பாடல்தான். இதற்கு முன்னரே 'சாந்தி நிலையம்' படத்தில் இடம்பெற்ற 'இயற்கை என்னும் இளையகன்னி' என்ற பாடலை எஸ்பிபி பாடியிருந்தாலும் 'ஆயிரம் நிலவே வா' பாடல்தான் முதலில் வெளிவந்தது.

1970களில் அப்போதைய பிரபல நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்காக பல திரையிசை பாடல்களை பாடினார். மேலும் சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் மற்றும் ஜானகி ஆகியோருடன் இணைந்தும் பல பாடல்களை பாடியுள்ளார். அதேபோல் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் இளையராஜா இசையில் தான் இவர் அதிக பாடல்களைப் பாடியுள்ளார். ஒருகாலத்தில் இளையராஜா, எஸ்.பி.பி மற்றும் ஜானகி ஆகியோர் இணைந்த கூட்டணி வெற்றிக்கூட்டணியாக இருந்தது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனை ஏற்படும். அவ்வாறு எஸ்பிபி வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் 'சங்கராபரணம். 1980ல் வெளிவந்த இந்த தெலுங்கு படம் முழுக்க முழுக்க இசையை அடிப்படையாக கொண்ட படம். இந்த படத்தில் இடம்பெற்ற 10 பாடல்களில் 9 பாடல்களை எஸ்பிபி தான் பாடினார். 10வது பாட்டில் ஆண்குரல் இல்லை என்பதால் இவர் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாட சங்கீதத்தை முறையாக கற்காத எஸ்பிபி, இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் மனமுருகி தனது கேள்வி ஞானத்தால் பாடியது அனைவரின் இதயத்தை தொட்டது. இந்த படத்திற்காக எஸ்பிபிக்கு சிறந்த பாடகருக்கான முதல் தேசிய விருது கிடைத்தது. இவருக்கு மட்டுமின்றி இந்த படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் மற்றும் பாடகி வாணிஜெயராம் ஆகியோர்களுக்கும் தேசிய விருது கிடைத்தது.

சங்கராபரணம் படத்தை அடுத்து 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம் என்ற தெலுங்கு திரைப்படமும் எஸ்பிபிக்கு திருப்புமுனையை கொடுத்தது. இந்த படத்தின் பாடல்கள் கிளாசிக்கல் இசையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், பாடல்களை பாடிய எஸ் பி பிக்கும் தேசிய விருது கிடைத்தது.

பின்னர் 1989 ஆம் ஆண்டில் எஸ் பி பி பாலிவுட்டுக்கு சென்று இந்தி பாடல்களை பாடினார். குறிப்பாக நடிகர் சல்மான்கான் நடித்த 'மைனே பியார் க்யா' என்ற மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் பாடியவர் எஸ்பிபி தான். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது 'தில் தீவானா' என்ற பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது.

எஸ்பிபி பாடகர் மட்டுமின்றி பின்னணி குரல், நடிப்பு, இசையமைப்பாளர் ஆகிய துறைகளிலும் கால்பதித்தார். கமல்ஹாசன் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் டப் ஆகிறது என்றால் அதில் கமல்ஹாசனுக்கு குரல் கொடுத்தவர் எஸ்பிபி ஆகத்தான் இருக்கும். குறிப்பாக கமல்ஹாசனின் 'தசாவதாரம்' படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு கமலின் 10 கேரக்டர்களில் 7 கேரக்டர்களுக்கு எஸ்பிபிதான் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் எஸ்பிபி ஒரு சிறந்த நடிகரும் கூட. கே.பாலசந்தர் இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற படத்தில் டாக்டர் கேரக்டரில் மிக இயல்பாக நடித்திருப்பார். இந்த படத்தின் கிளைமாக்ஸ் இவரது கேரக்டரை மையமாக கொண்டுதான் முடிந்திருக்கும். மேலும் 'கேளடி கண்மணி', சிகரம், போன்ற படங்களில் முக்கிய வேடங்களிலும், குணா, திருடா திருடா, தலைவாசல், பரதன், காதல் தேசம், ரட்சகன், பிரியமானவளே, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் நடித்த 'துடிக்கும் கரங்கள், மற்றும் மயூரி, சிகரம், உன்னை சரணடைந்தேன் உள்பட பல தமிழ் திரைப்படங்களுக்கும், ஏராளமான தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களுக்கும் எஸ்பிபி இசையமைத்துள்ளார்.

எஸ்பிபி இதுவரை 6 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். சங்கராபரணம், ஏக் துஜே கேலியே, சாகர சங்கமம், ருத்ரவீணா, மின்சார கனவு மற்றும் ஒரு கன்னட படம் ஆகியவற்றில் பாடிய பாடல்களுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி பல பிலிம்பேர் விருது, பிலிம்பேர் சவுத் விருது, நந்தி விருது, தமிழக அரசு விருது, கர்நாட அரசு விருது, உள்பட பல விருதுகள் அவரது பாடும் திறமைக்கு கிடைத்தன. மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருது, மற்றும் நான்கு பல்கலைக்கழகங்கள் கொடுத்த டாக்டர் பட்டம் என பட்டங்களை வாங்கி குவித்துள்ளார் எஸ்பிபி.

அரை நூற்றாண்டுகள், ஐந்து தலைமுறை இசையமைப்பாளர்கள், அண்டார்டிகா தவிர உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இசைப்பயணம், என எஸ்பிபியின் சாதனைகள் இந்த 70 வயதிலும் தொடர்ந்து கொண்டே உள்ளது. எஸ்பிபி அவர்களின் சாதனை பயணம் இன்னும் மிக நீண்ட தூரம் செல்ல, இந்த இனிய பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் எங்களது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

வாக்குக்கு விருதில்லை, வருகைக்கு தான் விருது: அரவிந்தசாமி

இன்றைய காலகட்டத்தில் பல தனியார் தொலைக்காட்சிகள், இணையதளங்கள், அமைப்புகள் ஆகியவை பல்வேறு விருதுகளை வழங்கும் விழாக்களை நடத்தி வருகின்றன...

'கோபம்' டைட்டில் ஏன்? சீமான் விளக்கம்

பிரபல இயக்குனர் சீமான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் ரீஎண்ட்ரி ஆகி இயக்கவுள்ள திரைப்படம் 'கோபம்'. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் நாயகான நடிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது...

இயக்குனர் பாலாஜி மோகனின் சஸ்பென்ஸ் தகவல் இதுதான்

கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு 'மாரி' இயக்குனர் பாலாஜி மோகன் முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று மாலை வெளியிடவுள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்தார் என்பதை பார்த்தோம். 'மாரி 2' திரைக்கதையை அவர் எழுதி கொண்டிருப்பதால் இந்த தகவல் 'மாரி 2' குறித்ததாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது...

தனுஷ்: இளவயது ராஜ்கிரணை அடுத்து இளவயது ரஜினி?

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பவர்பாண்டி' திரைப்படம் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் பவர்பாண்டி கேரக்டரில் நடித்த ராஜ்கிரணின் இளவயது கேரக்டரில் தனுஷ் நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே...

ஸ்பைடர்: டீசரில் பெற்ற வெற்றியை திரையிலும் பெறுமா?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஸ்பைடர்' திரைப்படம் வரும் தசரா திருநாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது...