close
Choose your channels

மசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்.. 10 சவரன் நகையும் பணமும் கொடுத்த இஸ்லாமியர்கள்..!

Monday, January 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மசூதியில் நடைபெற்ற இந்து திருமணம்.. 10 சவரன் நகையும் பணமும் கொடுத்த இஸ்லாமியர்கள்..!

கேரள மாநிலம் ஆலப்புழாவின் மசூதி ஒன்றில் இந்து முறைப்படி நடைபெற்ற திருமண விழா மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

ஆலப்புழாவைச் சேர்ந்த இளம் பெண் அஞ்சு. இவரின் தந்தை கடந்த வருடம் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தாய் தன் மூன்று மகள்களுடன் வசித்து வந்துள்ளார். தந்தை இறந்த பிறகு அஞ்சுவின் குடும்பம் பொருளாதார ரீதியில் மிகுந்த பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், மூத்த மகளான அஞ்சுவுக்குத் திருமணம் செய்துவைக்க அவரின் தாய் பெரும் சிரமப்பட்டுள்ளார்.

அப்போது அஞ்சுவின் தாய் பிந்து, தன் பகுதியில் உள்ள செருவாளி முஸ்லிம் ஜமாத் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தன் குடும்ப நிலை பற்றியும் மகளின் திருமணம் பற்றியும் குறிப்பிட்டு, திருமணத்துக்குப் பண உதவி செய்யமுடியுமா என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைப் படித்த உடனேயே அஞ்சுவின் திருமணச் செலவை ஏற்பதாக ஜமாத் கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, நேற்று அஞ்சுவுக்கும் சரத் என்பவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

அதுவும் செருவாளி மசூதி வளாகத்தில் சிறிய மேடை அமைத்து அதில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது. இது மட்டுமல்லாது நேற்று திருமணத்துக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் உறவினர்களுக்கு ஜமாத் கமிட்டி சார்பாக சைவ உணவு பரிமாறப்பட்டுள்ளது. மேலும், அஞ்சுவுக்கு சீதனமாக 10 பவுன் தங்க நகையையும் இரண்டு லட்சம் ரூபாய் பணமும் வழங்கியுள்ளது கமிட்டி. இந்தச் சிறப்பு திருமண நிகழ்வில் இந்து, முஸ்லிம் என அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வாதம் செய்துள்ளனர்.

ஏழைப் பெண்ணுக்கு அளித்த வாக்குறுதியின்படி திருமணத்தை விமரிசையாக நடத்தி முடித்துள்ள ஜமாத் கமிட்டிக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிகழ்வு பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ள மணமகன் சரத், "எங்கள் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு திருமணம் நடக்கும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் நடந்தது, அனைவருக்கும் நன்றி” என்று பேசியுள்ளார்.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்த இந்த திருமணத்திற்கு கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.