நானியின் கம்பீரமான நடிப்பால் கவனம் பெறுகிறது 'ஹிட் : த தேர்ட் கேஸ்'
நானியின் வால்போஸ்டர் சினிமா மற்றும் அனானிமஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சைலேஷ் கொலனு இயக்கத்தில் நானி, ஸ்ரீநிதி ஷெட்டி , சமுத்திரக்கனி, சூர்யா ஸ்ரீனிவாஸ், ராவ் ரமேஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ' ஹிட் : த தேர்ட் கேஸ் ' . ' ஹிட் ' போலீஸ் யுனிவர்சில் மூன்றாவது இன்ஸ்டால்மென்ட்.
எஸ்பி அர்ஜுன் சர்க்கார் ஐபிஎஸ் ( நானி) ரத்தம் கொதிக்கும் பிபி லெவல் கோபக்கார போலீஸ். எதையும் யோசிக்காமல் லத்தியால் சுளுக்கு எடுத்து பாடம் புகட்டும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர். அவரே சட்டத்துக்கு விரோதமாக மிகக் கொடூரமான கொலைகளையும் செய்கிறார். அந்தக் கொலைகள் அவரை மிகப்பெரிய டார்க் வெப் தளத்தில் இயங்கும் கொலைகார கும்பலிடம் அறிமுகப்படுத்துகிறது. எதற்காக அர்ஜுன் சர்க்கார் இந்த கொலைகளை செய்கிறார், அவருக்கும் டார்க் வெப்பில் இருக்கும் கொலைகார கும்பலுக்கும் என்ன தொடர்பு. முடிவு என்ன என்பது மீதி கதை.
சால்ட் & பெப்பர் லுக் நானி இன்னும் பக்குவமான நடிப்பில் மிளிர்கிறார். திரையில் தன்னை எப்படிக் காட்சிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் அவ்வளவு தெளிவு அவரிடம். போலீஸ் ஆபீஸராக கோபம் காட்டுவது, காதலியிடம் அடங்கி ஒடுங்கி அமைதி காத்து ரொமான்ஸில் ஸ்கோர் செய்வது என தன்னுடைய கேரக்டரை அவ்வளவு ரசித்து நடிக்கிறார் நானி.
'கேஜிஎஃப் ' கேர்ள் இங்கே மிருதுளா ஐபிஎஸ் ஆக மிளிர்கிறார். வெறும் காதல் டூயட் என இல்லாமல், போலீஸ் அதிகாரியாக ஆக்ஷனிலும் அதிரடி காட்டுகிறார். பாசமான ரிடையார்ட் போலீஸ் அதிகாரி மற்றும் அப்பாவாக சமுத்திரக்கனி அடடே.
போலீஸ் இன்வேஸ்டிகேஷன் மற்றும் அதைத்தொடர்ந்த திரைக்கதை எனில் அந்த விறுவிறுப்பும் வேகமும் குறையவே கூடாது. அதில் கவனமாக இருந்திருக்கிறார் இயக்குனர் சைலேஷ். படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை விறுவிறுப்பாக செல்கிறது. வன்முறையும் அதிகமாக தெரிந்தாலும் கதைக்குத் தேவையாகவே கடந்து செல்கிறது. படத்திற்கு இன்னொரு சிறப்பு காதல் காட்சிகள். நானி மற்றும் ஸ்ரீநிதி இருவரின் கெமிஸ்ட்ரியும் கூட திரையில் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.
சானு ஜான் வர்கீஸ் சினி மோட்டோகிராபியில் ஆக்சன் காட்சிகள் அனல் பறக்கின்றன. அதிலும் கிளைமாக்ஸ் ஃபயர் ரகம். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங்கில் படம் ஆரம்பித்தது முதல் எப்போது முடிந்தது என்றே தெரியாமல் சாட்டென கிளைமாக்ஸ் வந்து நிற்பது சிறப்பு. மைக்கி மேயர் இசையில் பின்னணி இசையும் அதிரடிக்கு அதகளம் சேர்த்து , காதல் காட்சியிலும் கவர்கிறது.
அவ்வளவு பெரிய கொலைகள் நடக்கிறது, இத்தனை கொலை காரர்கள் சுதந்திரமாக சுற்றுகிறார்கள். மேலும் நேர்மையான ஆபிசர்கள் ஆபத்தில் இருக்க போலீஸ் தரப்பு தொடர்ந்து அலட்சியம் காட்டுவது லாஜிக் மிஸ்டேக். மேலும் ஒரு போலீஸின் கோபத்துக்கு தொடர்ந்து வகுப்பெடுப்பதும் தேவையற்ற ' சத்ரியன் ' கால சினிமா டெம்ப்ளேட்.
மொத்தத்தில் ஹிட் : த தேர்ட் கேஸ் ' முதல் இரண்டு பாகங்களை விட இன்னும் பிரம்மாண்டமாக , கிரண்டாக மாறி நான்காம் பாகத்தை டபுள் டிரிக் ரகமாக மாற்றுவதற்கான அடித்தளமும் அமைத்து கம்பீரமாக நிற்கிறது.
Comments