close
Choose your channels

பூஞ்சை நோய் பரவுவது எப்படி? வதந்திகளுக்கு எளிமையான விளக்கம்!

Wednesday, June 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா பாதிப்பை அடுத்து பல இணைநோய்களும் மனிதர்களைத் தாக்கி வருகின்றன. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே மியூகோர்மைசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவிற்கு முன்பே அரிதாக காணப்பட்ட இந்த கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று தற்போது கருப்பு, வெள்ளை, மஞ்சள், பச்சை என்று அடுக்கடுக்காக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் மக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நோய்ப் பற்றிய சில வதந்திகளும் சந்தேகங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் கொரோனா நேரத்தில் பாதிப்பில் இருந்து மீண்ட பலருக்கு நோய்எதிர்ப்பு மண்டலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுவதால் தற்போது இந்த பூஞ்சை தொற்று அதிகமாக அறியப்படுகிறது.

கொரோனாவிற்கு முன்பு இந்த கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று இந்தியாவில் அரிதாகக் காணப்பட்டது. இதனால் பலருக்கு கண்கள் அகற்றப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

கருப்பு, வெள்ளை, மஞ்சள் தற்போது பச்சை என கலர் கலராக இந்த பூஞ்சைகள் நோய்த் தாக்கத்தை உருவாக்கினாலும் இவை அனைத்தும் ஒரே பூஞ்சையில் இருந்து வந்தவை அல்ல. ஆனால் ஏறக்குறைய இந்த பூஞ்சைகள் அனைத்தும் ஒரே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துவதால் நிறத்தை வைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் இதற்கான சிகிச்சை முறைகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

மியூகோர்மைசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று மனிதர்களின் திசுக்களில் புகுந்து கருப்பு வண்ணங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் கருப்பு பூஞ்சை எனக் கூறுகிறோம். மருத்துவர்களை பொறுத்த வரையில் இந்தப் பூஞ்சை நோய்த்தொற்று மட்டுமே அதிகப் பாதிப்பு கொண்டதாக இருக்கிறது. எனினும் இந்தப் பாதிப்புக்கு ஆம்போடெரிசின் எனப்படும் மருந்து பரவலாகக் கிடைக்கிறது.

கேண்டிடா அல்லது வெள்ளை பூஞ்சை எனும் ஒருவகை பூஞ்சை நோய்த்தொற்று, கொரோனாவில் இருந்து மீண்ட நபர்களின் திசுக்களில் புகுந்து கொண்டு சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இது கருப்பு பூஞ்சை போன்று அதிகப் பாதிப்பு கொண்டது அல்ல. மேலும் விலையுயர்ந்த மருந்துகளை இதன் சிகிச்சைக்கு பயன்படுத்தி நோயில் இருந்து எளிதாக வெளிவரலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அடுத்து பரவிய மஞ்சள் பூஞ்சை உடல் உறுப்புகளை பாதிக்கும் எனக்கூறிய மருத்துவர்கள் இந்த மஞ்சள் பூஞ்சையை பெரும் நோய்க் காரணியாகவும் பார்த்தனர். அந்த வகையில் தற்போது பச்சை நிறத்தில் புதிய பூஞ்சை நோய்த்தொற்று பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பூஞ்சைகள் பெரும்பாலும் காற்றில் அதுவும் நுண்துகள் வடிவத்தில் சுற்றித் திரிகின்றன என்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காற்றில் இருக்கும் நுண்துகள் வடிவத்தாலான பூஞ்சைகளை மனிதர்கள் உள்ளிழுப்பதன் மூலமே இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. மிக அரிதாக மனித வெட்டுகள் மற்றும் தோல்களில் பரவக்கூடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்தப் பூஞ்சைகள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களைப் போலவே சுற்றுப்புறத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பொதுவாக மண், காற்று மற்றும் மூக்கு மனிதர்களின் சளிகளில் கூட இருக்கலாம் என கூறப்படுகிறது.

பூஞ்சையில் இருக்கும் ஒரே நல்ல விஷயம் இது மற்ற தொற்றுநோயைப் போல மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பூஞ்சை தொற்று பரவும்போது எல்லோரிடமும் பாதிப்பை ஏற்படுத்தி விடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பூஞ்சை ஒருவரைத் தாக்கும்போது நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அவற்றைத் தாக்கி அழிக்கும். இப்படி இல்லாமல் அந்த மனிதருக்கு ஏற்கனவே நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் பிரச்சனை பெரிதாக மாறுகிறது என்பதையும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதனால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு நீரிழிவு நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், சிஓபிடி, ஆஸ்துமா, காசநோய், புற்றுநோய், ஆன்டிபயாடிக் குறைபாடு, ஊட்டச்சுத்து குறைபாடு போன்ற இணைநோய் இருந்தாலும் புகைப்பழக்கம், ஆல்கஹால் பழக்கம் இருந்தாலும் பூஞ்சை தொற்று குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கொரோனா பாதித்த அனைவருக்கும் இந்த நோய் ஏற்படாது. கொரோனா பாதிப்பில் இருந்து மீளும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையே இந்த நோய் தாக்குகிறது.

கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் லிம்போசைட்டு எனப்படும் வெள்ளை அணுக்கள் குறைந்து போகிறது. இந்தக் குறைபாட்டினால் பூஞ்சை நோய்த்தொற்றை எதிர்ப்பதில் மனித உடல் தடுமாறுகிறது.

பூஞ்சை பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதால் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் அதன் அறிகுறிகளை குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால் நீராவி பிடிப்பதை தவிர்க்க வேண்டும். நீராவி பிடிக்கும்போது வாய், மூக்கைச் சுற்றி பூஞ்சை படிந்து விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் ஒரே மாஸ்க்கை தொடர்ந்து பயன்படுத்தும்போது பூஞ்சை தாக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும் நீண்டகாலமாக ஆக்சிஜனை பயன்படுத்துவது, தொழில்துறை ஆக்சிஜன் சிலிண்டர்களைப் பயன்படுத்துவது, மருத்துவமனையில் தொடர்ந்து இருப்பது போன்ற விஷயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.