close
Choose your channels

கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடல்களை எவ்வாறு கையாள்வது???

Saturday, March 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவால் உயிரிழந்த நபர்களின் உடல்களை எவ்வாறு கையாள்வது???

 

கொரோனா வைரஸ் உலகிற்கே புதிய நோயாக இருப்பதால் வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்பவர்களை எப்படி அடக்கம் செய்வது என்பது பற்றி பொது மக்கள் மத்தியில் பல சந்தேகங்கள் இருந்து வருகின்றன. இது குறித்து சமூக வலைத்தள ஊடகங்களில் தவறான வதந்திகளும் பரவிவருகின்றன. இதைத்தடுக்கும் வகையில் இந்திய சுகாதார நல அமைச்சகம் பொது மக்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்குச் சில வழிகாட்டுதல்களை தற்போது பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும் உறுதுணையாக இருக்கும். மேலும், நோய்த்தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும் இந்த வழிமுறைகள் உதவிபுரியும்.

கொரோனா வைரஸ் கிருமி இறந்த உடல்களில் எவ்வளவு நேரம் தங்கியிருக்கும் என்பதைக் குறித்து இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆனால், இறந்த உடல்கள் மூலமாக நோய்ப்பரவ வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் நுரையீரல் மட்டுமே சில ஆபத்துக்களை விளைவிக்கக் கூடியது. மேலும், கொரோனா வைரஸ் நீர்த்துளிகளில் மட்டுமே அதிக நேரம் உயிர்வாழும் என்பதால் இறந்த உடல்களில் இருந்து வெளிவரும் திரவத்தில் இருந்து எச்சரிக்கையாக இருக்க தற்போது சில வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை

நோய்த்தொற்று தடுப்பு கட்டுப்பாடு பிரிவுகளில் உள்ள பணியாளர்கள், சவக்கிடங்கு, ஆம்புலன்ஸ் மற்றும் தகனம் செய்வோர் அல்லது புதைக்குழியில் உள்ள தொழிலாளர்கள் என அனைவரும் பின்வரும் வழிமுறைகளை கையாள வேண்டும் என்று மத்திய சுகாதார நல அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

முதலில், கை சுகாதாரத்தை முழுமையாகப் பேண வேண்டும். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருக்கவேண்டும் (எ.கா. முகமூடிகள், கையுறைகள், கிருமிநாசினிப்பொருட்கள்). முற்றிலும் பாதுகாப்பாக இறந்த உடல்களைக் கையாள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

உடலை அகற்றுதல்

இறந்த உடல்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து அகற்றும்போது கைகளை சுகாதாரமான முறையில் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். கண்ணாடி, நீர், N95 Mask, கிருமிநாசினிப் பொருட்கள் போன்றவற்றை எச்சரிக்கையாக வைத்திருக்க வேண்டும். PPE உடையையும் கட்டாயம் அணிந்துகொள்ள வேண்டும்.

இறந்த உடல்களில் உள்ள நீர் வெளிவரும் வழிகளை முதலில் முழுவதுமாக தடைச் செய்யப்படவேண்டும். இதைச்செய்யும்போது 1 சதவீதிம் ஹைபோகுளோரைட் உள்ள கிருமி நாசினிப்பொருட்களை கொண்டு சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். கூர்மையானப் பொருட்களைப் பயன்படுத்தி இறந்த உடலில் உள்ள துளைகள், திரவம் வடியும் இடங்களை மூடும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இறந்த உடலில் வாய் மற்றும் மூக்கை முழுவதுமாக மூடிவிட வேண்டும். உடலை தனியறையில் இருந்து வெளியே எடுத்து வரும்போது உறவினர்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் முறையான பாதுகாப்புடன் அனுமதிக்கலாம். இறந்த உடலை முற்றிலும் திரவக்கசிவு இல்லாத பிளாஸ்டிக் கொண்டு மூடிவிடவேண்டும். பிளாஸ்டிக்கின் வெளிப்புறம் 1 சதவீத ஹைபோகுளோரைட் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

உறவினர்களிடம் ஒப்படைத்தல் அல்லது சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லல் ஆகிய இரண்டு முறைகளையும் பின்பற்றலாம். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது பயன்படுத்தப்பட்ட அல்லது அகற்றும்போது பயன்படுத்தப்பட்ட அனைத்துப்பொருட்களையும் கிருமிநாசினிக்கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவக்கழிவுகளும் மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளின் படி அகற்றப்படவேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு முறையான ஆலோசனைகள் மற்றும் அவக்ளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்றவை முக்கியமானது எனவும் மத்திய சுகாதார நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப் பட்ட இடம்

கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்த இடம், வைக்கப்பட்ட இடம் என அனைத்தையும் கிருமிநாசினிக்கொண்டு முறையாகச் சுத்தப்படுத்த வேண்டும். மேலும், அந்தப் பொருட்களுடன் 30 நிமிடம் வரைக்கும் எந்தவிதமான தொடர்பையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சவக்கிடங்கு

இறந்தவர்களின் உடலைக் கையாளும் ஊழியர்கள் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். இறந்த உடல்களை பாதுகாக்க வேண்டும் என்றால் குறைந்தது 4.C குளிர் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். உடலை எடுத்துச் செல்லும் வாகனம், பெட்டிகள் போன்ற பொருட்களையும் 1 சதவீத ஹைபோகுளோரைட் கரைசலைக் கொண்டு முறையாக சுத்தம் செய்ய வேண்டும். உடலை அகற்றியப் பின்பு பயன்படுத்திய அறை, கதவு, கைப்பிடி எல்லாவற்றையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

உடல் பிரேத பரிசோதனை Embalming

உடலை பிரேத பரிசோதனைக்கு கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது.

ஒருவேளை பிரேத பரிசோதனை செய்யப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் தொற்று கட்டுப்பாட்டு சிகிச்சையில் நன்கு தேர்ச்சி பெற்ற மருத்துக் குழுக்கள் மட்டுமே அதைச்செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை செய்யப்படும் அறையில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் ஊழியர்கள் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். PPE மருத்துவக் கவரை ஒட்டுமொத்த மருத்துவக்குழுவும் அணிந்திருக்க வேண்டும். மேலும், கண்ணாடி, 95 Mask போட்டு முழுகவசத்தையும் அணிந்திருக்க வேண்டும். வட்டவடிவமுள்ள மருத்துவக் கத்திரிக்கோலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூர்மையாக உள்ள மற்ற எந்த மருத்துவக் கத்திரிகளையும் பயன்படுத்தக் கூடாது. அது மேலும் உடலில் காயங்களை ஏற்படுத்தி விடும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டும்.

உடலை எடுத்துச் செல்லல்

உடல் ஒரு பாதுகாப்பான உறையினுள் வைக்கப்பட்டுள்ளது. எனவே எடுத்துச் செல்லும் ஊழியர்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஊழியர்கள் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எடுத்துச் செல்லும் வாகனத்தையும் முறையான கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.

உடல் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கவர்க்கு வெளிப்புறத்தில் 1 சதவீத ஹைட்ரோகுளோரைட் கிருமிநாசினியைப் பயன்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று திரவத்தில் இருந்துதான் பெரும்பாலும் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. எனவே உடலை அகற்றும்போது கையுறைகள், முகமூடிகள் அணிந்துகொண்டு ஊழியர்கள் அதனை அகற்றலாம். மேலும், உடல் தகனத்தின் போது குடும்ப உறுப்பினர்களுக்கு இறந்தவர்களின் உடலையும் திறந்து காட்டலாம். இறப்பு நிகழ்ச்சியில் அதிகபடியான நபர்கள் கூடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மதச் சடங்குகளுக்காக வாசித்தல், புனித நீரைத் தெளித்தல், உடலைத் தொடுதல் போன்றவை கண்டிப்பாகத் தடைச்செய்யப்பட வேண்டும். அதேபோல இறந்தவர்களின் உடலைத் தொடுவது, முத்தமிடுவது போன்றவையும் தவிர்க்கப்படவேண்டும். இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடலைத் தகனம் செய்வோர் மிகவும் சுகாதாரமான முறைகளைப் பின்பற்றவேண்டும்.இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்யும்போது சாம்பலை (அஸ்தியை) எடுத்துவருவது பாதுகாப்பானது அல்ல எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.