வீட்டில் பொரி கடலை அதிகமா இருக்கா? ருசியான ஸ்நாக்ஸ் ரெடி!

  • IndiaGlitz, [Saturday,October 16 2021]

ஆயுத பூஜை, விஜயதசமி கொண்டாட்டங்கள் முடிந்து எல்லா வீடுகளிலும் பொரி, கடலை மிஞ்சி போயிருக்கும். நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்தப் பொரியை வைத்து ஆரோக்கியமான பல ஸ்நாக்ஸ் வகைகள் செய்யமுடியும். மேலும் நார்ச்சந்து நிறைந்த இந்தப் பொறியை சிலர் சிற்றுண்டியாகவே சாப்பிட்டு வருகின்றனர். அதோடு இந்த பொரி கொழுப்பை குறைப்பதற்கும், செரிமானத்திற்கும் சிறந்த பலனை அளிக்கின்றன.

பொரி உருண்டை- தேவையான பொருட்கள்: வெல்லம், பொரி

முதலில் நாட்டு சர்க்கரை அல்லது மண்டை வெல்லத்தை எடுத்து கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். இந்த வெல்லப்பாகு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்போது வைத்திருக்கும் பொரியை கொஞ்சம் கொஞ்சமாக வெல்லப்பாகில் கலந்து சிறுசிறு உண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உருண்டைகள் எவ்வளவு நாட்கள் ஆனாலும் நமத்துப் போகாமல் மொறுமொறுப்புடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.

காரப் பொரி- தேவையான பொருட்கள்: எண்ணெய், பூண்டு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, கருவேப்பிலை, உப்பு

அடுப்பில் கடாயை வைத்து முதலில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நான்கு பல் பூண்டை தட்டிப் போட்டு வறுக்க வேண்டும். அடுத்து மிளகாய்பொடி, மஞ்சள் தூள், கறிவேப்பிலை போன்றவற்றை தேவைக்கேற்றபடி போட்டு, அதில் பொரியையும் சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்க வேண்டும். அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கி சுவையாகச் சாப்பிடலாம்.

மசாலா பொரி- தேவையான பொருட்கள்: கேரட், வெங்காயம், நிலக்கடலை, தேங்காய் எண்ணெய், மிளகாய்த் தூள், கறிவேப்பிலை, உப்பு.

சுரண்டிய பச்சை கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை அல்லது வேகவைத்த வேர்கடலை, மிளகாய்த் தூள், உப்பு போன்றவற்றை தேவையான அளவு கலந்து, அந்த கலவையில் பொரி மற்றும் தேங்காய் எண்ணெயை விட்டு கலந்து சாப்பிட்டால் மணமான மசாலா பூரி தயார்.

பேல் பூரி- தேவையான பொருட்கள்: பொரி, வேக வைத்த பட்டாணி, வேவைத்த உருளைகிழங்கு, தக்காளி, வெங்காயம், ஓமப்பொடி அல்லது மிக்சர், புதினா சட்னி, டொமேட்டோ சாஸ், கேரட்

ஒரு பெரிய பாத்திரத்தில் பொரியை கொட்டிக் கொண்டு அதில் வேகவைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, சீவிய கேரட் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். எலுமிச்சை சா, டொமேட்டோ சாஸ், புதினா சட்னி, சாட் மசாலா, உப்பு, ஓமப்பொடி, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலந்து பின்பு பரிமாறலாம்.