நான் பச்சை தமிழன். என்னை தூக்கி போட்டால் இமயமலையில் தான் விழுவேன்! ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Friday,May 19 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் இன்று நான்காவது நாளாக கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்கின்றார். இன்றுடன் ரசிகர்களுடன் அவரது சந்திப்பு முடிவடைய உள்ள நிலையில் ரசிகர்கள் முன்பு சற்று முன்பு ரஜினிகாந்த் பேசினார். அவர் பேசியதாவது:

ரசிகர்களுடனான இந்த சந்திப்பை சிறப்பாக நடத்த உதவிய அனைத்து நிர்வாகிகளுக்கும், நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதுமட்டுமின்றி இந்த சந்திப்புக்கு சரியான முறையில் பாதுகாப்பு கொடுத்த காவல்துறையினர்களுக்கும், என்னை விரட்டி விரட்டி பேட்டி எடுத்த மீடியாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்

முதல் நாள் நான் பேசியபோது நான் அரசியலுக்கு வந்தால் ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பேசியது இவ்வளவு பெரிய சர்ச்சையாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததையும் காண முடிந்தது. ஆனால் எதிர்ப்பு இல்லாமல் எதுவும் முடியாது. குறிப்பாக அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். சமூக வலைத்தளங்களில் என்னை விமர்சனம் செய்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் எழுதும்போது மக்கள் ஏன் இவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோக்கின்றனர் என்பதுதான் ஒரு வருத்தமாக உள்ளது.

ஒரே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினிகாந்த் தமிழனா? என்று பலர் கேட்கின்றனர். எனக்கு இப்போது 67 வயது ஆகின்றது. நான் வெறும் 23 ஆண்டுதான் கர்நாடகத்தில் இருந்தேன். மீதி 44 ஆண்டுகள் தமிழகத்தில் தான் இருக்கின்றேன். தமிழர்கள் கூடவே வளர்ந்தேன். எனக்கு பேர், பெயர், புகழ், பணம் என்று அனைத்தையும் அள்ளிக்கொடுத்து நீங்கள்தான் என்னை தமிழனாக மாற்றிவிட்டீர்கள். நான் இப்போது பச்சைத்தமிழன். ஒருவேளை தமிழ்மக்கள் என்னை தூக்கி போட்டால் நான் விழும் இடம் இமயமலையாகத்தான் இருக்குமே தவிர வேறு எந்த மாநிலமாகவும் இருக்காது. இவ்வாறு ரஜினிகாந்த் தனது ரசிகர்களிடையே பேசினார்.