இளையராஜாவின் பல கோடி மதிப்புள்ள பொருள்கள் திருட்டு: அதிர்ச்சி தகவல் 

இசைஞானி இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் பயன்படுத்தி வந்த அரங்கில் பல கோடி மதிப்புள்ள பொருள்களை வைத்து இருந்த நிலையில் அந்த பொருட்கள் தற்போது திருடு போய்விட்டதாக தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள ஒரு அரங்கில் இசைஞானி இளையராஜா பல ஆண்டுகளாக தனது இசைக்கருவிகளையும் இசை குறிப்புகளையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பிரசாத் ஸ்டூடியோவுக்கும் இளையராஜாவுக்கும் அந்த இடம் குறித்த பிரச்சனை நடந்து வருகிறது என்பதும் இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது அலுவலகத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள இசை கருவிகள் உள்ளிட்ட பொருட்கள் திருடுபோய் விட்டதாகவும், தனது விலைமதிப்பில்லாத இசைக்குறிப்புகளும் சேதமடைந்துவிட்டதாகவும் காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளையராஜாவின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் திருடு போய்விட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.