close
Choose your channels

Imaikkaa Nodigal Review

Review by IndiaGlitz [ Friday, August 31, 2018 • മലയാളം ]

'இமைக்கா நொடிகள்'- மிதமான வேகம்

பெங்களூரில் 'ருத்ரா' என்ற பெயரில் தொடர் கொலை செய்து வரும் ஒரு சைகோ கொலைகாரனை சிபிஐ அதிகாரி பிடிப்பதுதான் இந்த படத்தின் கதை

அனுராக் காஷ்யப் பெங்களூரில் பணக்காரர் மகள், மந்திரியின் மகன் என கடத்தி அவர்களிடம் பணமும் கேட்டு வாங்கி கொண்டு கடத்தியவர்களை கொடூரமாக கொலையும் செய்கிறார். இந்த வழக்கை கையாளும் நயன்தாரா கொலைகாரனை பிடிக்க தீவிர முயற்சி செய்கிறார். ஐந்து வருடங்களுக்கு முன் தன்னால் என்கவுண்டர் செய்யப்பட்ட 'ருத்ரா' எப்படி மீண்டும் உயிருடன் வரமுடியும் என்ற குழப்பத்தில்  நயன்தாரா இருக்கும் நிலையில் ஆதாரங்களும் சந்தர்ப்ப சுழ்நிலையும் 'ருத்ரா' என்ற கொலைகாரன் தனது சகோதரர் அதர்வா தான் என்று அவருடைய அலுவலக அதிகாரிகளே கூறுகின்றனர். உண்மையான ருத்ரா யார்? அவரை நயன்தாரா எப்படி கண்டுபிடித்தார், ருத்ரா என்ற பெயரில் அதர்வா சிக்கியது எப்படி? நயன்தாராவுக்கு கெட்ட பெயர் ஏற்படும்படி அனுராக் செய்வது ஏன்? போன்ற முடிச்சுகளை அவிழ்ப்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை

சிபிஐ அஞ்சலி என்ற மிடுக்கான கேரக்டர்தான் நயன்தாராவுக்கு. இருப்பினும் அவருடைய நடிப்புக்கு தீனி போடும் வகையில் இந்த கேரக்டர் வலிமையாக உருவாக்கப்படவில்லை. சிபிஐ அதிகாரியான நயன்தாராவை இயக்குனர் ரொம்பவே அடக்கி வாசிக்க வைத்திருக்கின்றார். மாஸ் நடிகை நயன்தாராவுக்காகவே அவரது கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. விஜய்சேதுபதியுடனான பிளாஷ்பேக் காட்சியில் மட்டும் நயன்தாராவின் நடிப்பு அருமை. மற்றபடி இந்த படம் நயன்தாராவுக்கு இன்னொரு படம் என்ற அளவில் தான் உள்ளது. 

அதர்வாவுக்கு நிச்சயம் நல்ல கேரக்டர் என்றுதான் சொல்ல வேண்டும். ருத்ரா என்ற குற்றவாளியான தான் எப்படி சிக்க வைக்கப்பட்டோம் என்பதில் இருந்து ராஷிகண்ணாவிடம் காதல், மோதல் பிரேக் அப் மற்றும் மீண்டும் காதல் என நிறைவான நடிப்பை தந்துள்ளார். ஆக்சன் காட்சிகளில் பின்னி எடுக்கின்றார்.

சைக்கோ கொலைகாரனான அனுராக் வந்தாலும் அவருடைய கேரக்டரின் பின்னணி, அவர் ஏன் இந்த நிலைக்கு வந்தார் என்பதை இயக்குனர் தெளிவாக விளக்கியிருப்பதால் இந்த கேரக்டர் மீது கோபம் வருவதற்கு பதில் ஒரு மரியாதை வருகிறது. 'கஷ்டப்பட்டு உழைத்த ஒருவரின் உழைப்பு, இன்னொருவருக்கு புகழாக மாறுவதால் ஏற்படும் வலியை இயக்குனர் இந்த கேரக்டர் மூலம் விளக்கியுள்ளார். வில்லன் நடிப்பில் அசத்தும் அனுராக் காஷ்யப்புக்கு கோலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை

அதர்வாவின் காதலியாக நடித்திருக்கும் ராஷிகண்ணா தமிழுக்கு புதுவரவு. இவருடைய நடிப்பு ஓகே என்றாலும் படத்தின் மெயின் கதைக்கு இவர் கேரக்டர் தேவையில்லை என்பதால் நடிப்பை ரசிக்க முடியவில்லை

விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் தோன்றும் காட்சிகள் அருமை. இவருடைய கேரக்டர் தான் கதையின் ஆணிவேர். விஜய்சேதுபதி-நயன்தாரா ரொமான்ஸ் காட்சிகள் குறைவு என்றாலும் மெச்சூரிட்டியான ரொமான்ஸ் காட்சிகள் திருப்தி அளிக்கின்றது.

ரமேஷ் திலக், தேவன் என அனைவரும் தங்கள் கேரக்டர்களை சரியாக செய்துள்ளனர். குறிப்பாக நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் குழந்தை நடிப்பில் அசத்துகிறார்.

ஒரு விறுவிறுப்பாக க்ரைம் கதையில் இத்தனை பாடல்களா? அதிலும் குடித்துவிட்டு பாடும் குத்துப்பாடல் இந்த படத்திற்கு தேவையே இல்லை. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பின்னணி இசை சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓரளவுக்கு மிரட்டுகிறது.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு சூப்பர். குறிப்பாக அதர்வாவை போலீஸ் விரட்டும் காட்சிகள் அருமையாக படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் மிகப்பெரிய பல்வீனமான அதர்வா-ராஷிகண்ணா காதல் காட்சிகளை எடிட்டர் புவன் ஸ்ரீனிவாசன் மொத்தமாக கூட வெட்டியிருக்கலாம்.

'டிமாண்டி காலனி' தந்த இயக்குனர் அஜய்ஞானமுத்துவின் திரைக்கதையில் கொஞ்சம் குழப்பம் அதிகம். முதல் பாதியில் அரைமணி நேரத்திற்கு மேலாக அதர்வா-ராஷிகண்ணா காதல் காட்சிகள் வருவது படத்தின் பலவீனம். மேலும் நயன்தாராவின் கேரக்டர் சிபிஐ சிந்திக்கும் அளவுக்கு புத்திசாலித்தனமாக செயல்படவில்லை. வில்லன் அனுராக் காஷ்யப்பை நேருக்கு நேர் சந்தித்தும் அவரை பிடிப்பதில் கோட்டை விட்டது ஒரு சிபிஐ ஆபீசருக்கு அழகா? கொலைகாரன் கூறும் டிமாண்ட்களை எந்த சிபிஐ அதிகாரியாவது அப்படியே செய்வாரா? 

மேலும் போலீஸ், சிபிஐ அதிகாரிகளே கண்டுபிடிக்க முடியாத ரகசியங்களை அதர்வா மிக எளிதில் எந்தவித சிரமும் இன்றி கண்டுபிடிப்பதை நம்ப முடியவில்லை. படத்தின் ஒரே பலம் அனுராக் காஷ்யப் மற்றும் நயன்தாரா கேரக்டர்களின் பின்னணியை இயக்குனர் கடைசிவரை யூகிக்க முடியாதவாறு ரகசியமாக கொண்டு சென்றதுதான். அதேபோல் இயக்குனரிடம் கேட்க வேண்டிய பல சந்தேக கேள்விகள் உள்ளது. ஆனால் அவற்றை கேட்டால் படத்தின் உயிர்நாடியான சஸ்பென்ஸ் உடையும் என்பதால் அவற்றை இங்கே கேட்க முடியவில்லை.

மொத்தத்தில் இரண்டாம் பாதியின் திருப்பங்கள், சஸ்பென்ஸ் ஆகியவற்றுக்காக இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம்

Rating: 2.5 / 5.0

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE