இந்தியக் கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

கிறிஸ்டியானோ ரொனால்டோவைத் தொடர்ந்து உலகில் அதிக கோல்களை அடித்த 2 ஆவது கால்பந்து வீரர் சுனில் சேத்ரி. கடந்த 2002 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் தற்போது இந்திய கால்பந்து கேப்டனாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் பெங்களூரு FC அணிக்காகவும் சேத்ரி விளையாடி உள்ளார்.

இந்நிலையில் சேத்ரி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ளார். அதில், “ஒரு மகிழ்ச்சியற்ற பதிவு- எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு ஆறுதலான செய்தி, நான் நன்றாக உள்ளேன். கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். எனவே மீண்டும் கால்பந்து களத்திற்கு விரைவில் திரும்புவேன். அனைத்துப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்க அனைவருக்கும் நினைவூட்டுவதற்கு இதைவிட சிறந்த நேரம் இல்லை” எனத் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் வரும் மார்ச் 25, 29 ஆம் தேதிகளில் துபாய், ஓமன், ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ள கால்பந்து போட்டிகளில் சேத்ரி விளையாட இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக உலக அளவில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்ற சேத்ரி 115 போட்டிகளில் 75 கோல்கள் அடித்து சாதனை படைத்து உள்ளார்.

மேலும் 36 வயதான சுனில் சேத்ரி ஆசியாவின் ஐகான் என்ற பட்டமும் பெற்று இந்திய கால்பந்து அணிக்கு பெருமை சேர்த்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.