close
Choose your channels

சீன எல்லையில் மோதல் ஏற்படக் காரணம் என்ன??? இருதரப்புகள் கூறும் விளக்கம்!!!

Wednesday, June 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த மே மாதம் 5, 6 தேதிகளில் இருந்து இந்திய எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறுகிறது. அதற்கு எதிராக இந்தியா தனது இராணுவத்தைப் பயன்படுத்தி பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மே 5, 6 ஆம் தேதிகளில் ஆரம்பக் கட்டத்தில் சீன இராணுவத்தினர் இந்திய இராணுவத்தினருடன் கைக்கலப்பில் ஈடுபட்டனர் என்றும் கூறப்பட்டது. அதற்கு பின்பு இந்திய எல்லைப் பகுதியில் நிலவும் பதட்டத்தைத் தணிக்க இந்திய பாதுகாப்புத் துறை சார்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகளே ஈடுபட்டு வந்தனர். அதே நேரத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியா கட்டமைப்புப் பணிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சீனா தரப்பில் எச்சரிக்கை வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் சார்பாக 12 கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. ஆனால் உடன்பாடு எட்டப்பட வில்லை. இறுதியாக ஜுன் 6 ஆம் தேதி இருநாட்டு இராணுவ அதிகாரிகளும் நடத்திய பேச்சுவாத்தையில் முடிவுகள் எட்டப்பட்டு விட்டதாக சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்து இருந்தார். அதையடுத்து இருநாட்டு இராணுவ படைகளும் எல்லைப் பகுதிகளில் இருந்து முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப் பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் திங்கள்கிழமை இரவு ஜுன் 15 ஆம் தேதி இந்திய இராணுவ அதிகாரி உட்பட வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தும் அளவிற்கு கடும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய-சீன எல்லைப்பகுதியில் கடந்த 45 வருடங்களாக எந்த துப்பாக்கிச் சூடும் நடத்தப் படவில்லை. எந்த அசம்பாவிதங்களும் நடந்ததாகத் தகவல்கள் இல்லை. ஆனால் இருநாட்டு இராணுவ வீரர்களும் அவ்வபோது எல்லையில் கைக்கலப்பில் ஈடுபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதற்கு எல்லைப் பகுதிகளில் நடக்கும் கட்டமைப்பு மேம்பாடுகளே காரணமாகக் கூறப்படுகின்றன. இதைத்தவிர காஷ்மிர் எல்லைப்பகுதியில் குறிப்பிட்ட பகுதிக்கு இருநாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்தப் பிரச்சனைதான் இன்றைக்கு வரைக்கும் நீடித்து வருகிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அச்செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கட்டுரையில் “ஜம்மு காஷ்மீரின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்தியா இன்னும் சரிசெய்யாமல் இருந்து வருகிறது. இந்த பிரச்சனைதான் தற்போது எல்லையில் நிலவும் பதட்டத்திற்கு முக்கிய காரணம்” என்ற விமர்சனத்தை வெளியிட்டு இருக்கிறது.

அதைத்தவிர காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரம் ரத்து விவகாரத்திற்கும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லைப் பிராந்திய எல்லை விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற கருத்தையும் வெளியிட்டு உள்ளது. தற்போது கல்வான் பகுதியில் என்ன நடந்தது என்பது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவான விளக்கத்தையும் வெளியிட்டு இருக்கிறது. அதில் கடந்த திங்கள் கிழமை பின்னிரவில் கல்வான் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த இருநாட்டு இராணுவ வீரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த விவகாரத்தின்போது கர்னல் சந்தோஷ் பாபுவை சீன இராணுவ வீரர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. ஒரு இராணுவ உயர் அதிகாரியே தாக்கப்படும்போது நிலைமை மோசமாவது இயல்புதான். அப்படித்தான் அன்றைக்கும் நடந்து இருக்கிறது.

கர்னல் சந்தோஷ்பாபு தாக்கப்பட்டவுடன் இந்திய இராணுவ வீரர்கள் சீன இராணுவ வீரர்களுடன் கடுமையான கைகலப்பில் ஈடுபட்டு இருக்கின்றனர். நடந்தது 14, 15 ஆயிரம் அடி உயரத்தில் பூஜ்யம் வெப்பநிலை உள்ள ஒரு பகுதியில் என்பதும் குறிப்பிடத்தக்கது. கைகலப்பில் முதலில் சந்தோஷ் பாபு உட்பட 2 இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் நேற்று காலையில் வெளியான முழுமையான தகவலில் இந்த எண்ணிக்கை 20 என்றும் குறிப்பிடப் பட்டு இருந்தது. நடந்த கைகலப்பில் எந்த ஆயுதங்களும் பயன்படுத்த வில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன்னதாக 1959 ஆம் ஆண்டும் இதே போன்ற ஒரு சம்பவம் பெரும் பயங்கரத்தைக் கொண்டு வந்தது. இந்திய- திபெத் எல்லைப் பகுதியில் உள்ள காங்கோ பாஸ் என்ற பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்த 3 இந்திய இராணுவ வீரர்கள் அக்டோபர் 20, 1959 ஆம் தேதி காணாமல் போகின்றனர். அவர்களைத் தேடி 6 இந்திய இராணுவ வீரர்கள் அக்டோபர் 21 ஆம் தேதி அனுப்பப் பட்டனர். ஆனால் அவர்களும் திரும்பவில்லை என்பதுதான் கொடுமையே. காணாமல் போன 9 இராணுவ வீரர்களின் சடலங்களை சீனா கொடுக்க மறுத்து பின்பு நவம்பர் 14 ஆம் தேதிதான் சீனா இந்தியாவிடம் ஒப்படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்போதைய நிலைமையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எல்லையில் போர் பதட்டம் இல்லை என்றே அறிவித்தது. அத்தகவலை இந்திய பிரதமர் நேரு முழுமையாக நம்பவும் செய்தார். ஆனால் கடைசியில் 1962 இல் பயங்கர போர் ஏற்பட்டு கடைசியில் பேச்சு வார்த்தையில் முடிந்தது. ஆனால் இந்தியாவிற்கு படும் தோல்வி என்றே அறிவிக்கப்பட்டது. அது அரசியல் தோல்வியாகவும் பின்னாட்களில் மாற்றப்பட்டது. அதேபோன்ற ஒரு நிலைமை தற்போது ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தையும் அவ்வபோது சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதனால்தான் இந்தியா தொடர்ந்து சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முனைகிறது எனவும் கூறப்படுகிறது. தற்போது கல்வான் பகுதியில் நடைபெற்ற விவகாரம் குறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, “சீன தரப்பு தான்தோன்றித் தனமாக எல்லையில் உள்ள கட்டுப்பாட்டையும் நடைமுறைகளையும் மீறி செயல்பட்டதே இந்த இரு தரப்பு மோதலுக்கும் காரணம்” எனத் தெரிவித்து உள்ளார்.

மேலும், இந்திய ராணுவத் தரப்பு, தங்களின் அனைத்துச் செயல்பாடுகளையும் இந்திய எல்லைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே செய்து வருகின்றது. அதேயேதான் சீனத் தரப்பிடமிருந்தும் நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதற்கு தற்போதுள்ள முரண்பாடுகளை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதே நேரத்தில் இந்தியாவின் இறையாண்மையையும் நிலப்பகுதியையும் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம் எனவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெளிவு படுத்தி இருக்கிறது.

தற்போது சீனாவின் தரப்பில் இருந்து ஒரு செய்தியும் வெளியாகி இருக்கிறது. அதில், “ஆத்திரமூட்டும் செய்கைகளை செய்ய வேண்டாம். எல்லை நிலைமையை சிக்கலாக்கும் ஒருதலைபட்ச நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம்” என்று சீனா இந்தியாவை வலியுறுத்தி இருக்கிறது. மேலும், சீனாவின் வெளியுறவுத் துறை சார்பாக வெளியான அறிக்கையில் “இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்சனையை தீர்ப்பார்கள் நாங்களும் நிச்சயமாக அடுத்தடுத்து மோதல்களை காண விரும்பவில்லை” எனக் குறிப்பிடப் பட்டு இருக்கிறது. இந்தியா தரப்பிலும் பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டவே விரும்புகிறோம் என தொடர்ந்து தெளிவு படுத்தப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.