19 வருட உலகச் சாதனையை முறியடித்த இந்தியச் சிறுவன்… செஸ்ஸில் இன்னொரு புது வரவு!

  • IndiaGlitz, [Friday,July 02 2021]

செஸ் விளையாட்டிற்குப் பெயர்போன விஸ்வநாதன் ஆன்ந்த் இந்தியாவை சேர்ந்தவர் என்ற முறையில் நாம் பெருமைப்பட்டு கொள்கிறோம். அந்த வகையில் அமெரிக்கவாழ் இந்தியர் ஒருவர் 12 வயதில் 19 வருட செஸ் உலகச் சாதனையை முறியடித்து மீண்டும் செஸ் விளையாட்டிற்கு புது தெம்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

சமீபத்தில் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புத்தபிஸ்ட் நகரில் இளம் வயதினருக்கான கிராண்ட் மாஸ்டர் சதுரங்கப்போட்டி நடைபெற்று முடிந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த லியோன் மெண்டோன்கா என்பவரும் அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் அபிமன்யு மிஸ்ரா என்பவரும் நேரடியாக மோதிக் கொண்டனர். இதில் அபிமன்யு மிஸ்ரா வெற்றிப்பெற்று உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

19 வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் என்பவர் 12 வயது 7 மாதங்களில் உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனை பட்டத்தை பெற்றார். அவருடைய சாதனையை தற்போது அபிமன்யு 12 வயது 4 மாதம் 25 நாட்களில் முறியடித்து இருக்கிறார். இதுகுறித்து கருத்துக் கூறிய செர்ஜி 19 வருடம் என்பது மிக நீண்டகாலம். கண்டிப்பாக ஒருநாள் இந்த சாதனை முறியடிக்கப்பட வேண்டும் என நினைத்தேன். அது தற்போது நடந்து இருக்கிறது.

அபிமன்யு மிஸ்ரா எதிர்காலத்தில் ஒரு சிறந்த செஸ் போட்டியாளராக மாறுவார் என அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார். இளம் வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற அபிமன்யு மிஸ்ராவிற்கு பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.