கொரோனா பீதியில் பெற்ற மகளையே 15 முறை கத்தியால் குத்திய தாய்… கோரச் சம்பவம்!

  • IndiaGlitz, [Saturday,June 26 2021]

லண்டனில் தன் கணவருடன் வசித்துவந்த 36 வயதான தமிழ்ப்பெண் ஒருவர் கொரோனா நேரத்தில் இறந்து விடுவோம் என நினைத்து கடும் மனஅழுத்ததிற்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்நிலையில் கணவன் வேலைக்குச் சென்றதால் மேலும் பதட்டமாகி தான் பெற்ற மகளையே 15 முறை கத்தியால் குத்திய கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

லண்டனில் உள்ள மொனார்சிட்டி பகுதியில் வசித்து வந்தவர் சுகந்தன் சிவானந்தம். இவருடைய மனைவி சுதா. இவர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசித்து வந்துள்ளனர். இந்தத் தம்பதிகளுக்கு 5 வயதில் சயாகி எனும் பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதல் சுதா வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் கொரோனாவினால் இறந்துவிடுவேன் என்று அடிக்கடி கூறியதால் மனநல மருத்துவரிடம் ஆலோசனையும் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவானந்தம் வேலை காரணமாக அலுவலகம் செல்ல முற்பட்டபோது போக வேண்டாம் என்று சுதா கெஞ்சி இருக்கிறார். ஆனால் சிவானந்தம், சுதாவை வீட்டிலேயே விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனால் தனியாக இருந்த சுதா நான் இறந்துவிடுவேன். நான் இறந்துவிட்டால் என் குழந்தையை யாரும் பார்த்துக் கொள்ள மாட்டார்கள் என நினைத்து தான் பெற்ற குழந்தையையே கழுத்தில் 15 முறை கத்தியால் தாக்கி உள்ளார். இதனால் குழந்தை அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

மேலும் சுதாவும் தற்கொலைக்கு முயன்று பலமுறை தனது வயிற்றில் குத்திக் கொண்டுள்ளார். இந்தத் தகவலை கேட்டு வீட்டிற்கு திரும்பிய சிவானந்தம் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதோடு என் மனைவியை விட்டுவிடுங்கள். அவர் மன அழுத்தத்தில் இப்படி செய்து விட்டார் என ஆதாரங்களைக் காட்டி நீதிமன்றத்தை நாடி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.