Download App

Indrajith Review

இந்திரஜித் சாகச பயணம்

கலைப்புலி தாணு படம் என்றாலே ரசிகர்களை சுண்டி இழுக்கும் விதமாக அவர் விளம்பர யுத்தி அமையும். அவர் மகன் கலாபிரபு வளர்ந்து வரும் ஹீரோ கவுதம் கார்த்திக்க்கோடு  கை கோர்த்து  இந்திரஜித் என்ற சாகசம் நிறைந்த படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார். படம் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு வின் கல் பூமியை நோக்கு புறப்பட்டு வந்து விழுகிறது. அதில் மனித நோய்களை காக்கும் சக்தி இருப்பதை அறிந்த ஒரு பேராசிரியர்  (சச்சின் கேடெக்கர்) அதை கண்டு பிடிக்க நான்கு மாணவர்கள் துணையோடு முயல்கிறார். ஊரில் இருந்து வரும் பக்கத்துக்கு வீட்டு பையன் இந்திரஜித் (கவுதம் கார்த்திக்) அவருடன் இனைய இந்திய அரசின் தொல் பொருள் ஆராய்ச்சி கழகத்தின் தலைவர் கபில் சர்மா  (சுதன்ஷு பாண்டே )வில்லனாக மாறி துரத்துகிறார். கல்லை தேடி போகும் பயணம் பல அபாயங்கள் மிகுந்த அருணாச்சல பிரதேச காடுகளுக்கு செல்ல கடைசியில் கதாநாயகனின் கோஷ்டி அதை கைப்பற்றினார்களா இல்லையா என்பதே மீதி திரைக்கதை.

சமீப காலத்தில் ஏறுமுகமாக இருக்கும் ஹீரோ கவுதம் கார்த்திக் கிடைத்த வேடத்தை சிறப்பாக செய்ய முயன்றிருக்கிறார் அவர் கதாபாத்திரத்தில் வலுவில்லாமல் போனதுதான் சற்று உதைக்கிறது. காதல் பாடல் காட்சிகளிலும் காமடி செய்ய முயலும்போதும் அப்பா நவரச நாயகனை நினைவு படுத்தினாலும் சண்டை காட்சிகளில் நல்ல வேகம் காட்டி ஜமாய்க்கிறார். ஹர ஹர மஹாதேவகி படத்தில் வந்ததுபோலவே கவுதம் ஒரு கதாநாயகி துணி மாற்றுவதை முழுவதுமாக பார்ப்பதும் பதிலுக்கு அவர் இவரை நாடு ரோட்டில் பேண்ட் ஷர்டை கழட்ட வைப்பதும் கொஞ்சம் ஓவர். இரண்டு கதாநாயகிகள் இருந்தும் கவுதம் கெமிஸ்ட்ரி நாய் குட்டி ஹாப்பியுடன்தான் ஒர்க் அவுட் ஆகிறது பரிதாபம். அஷ்ரிதா ஷெட்டி காட்டு பெண் போல இரண்டாவது பாதியில் வருகிறார் ஆனா அவரால் திரைகதைக்கோ அல்லது அவருக்கோ எந்த பயனும் இல்லை. கடைசியில் ஹீரோவை விரும்புவதாக சொல்லி அழும்போதும் எடுபடவில்லை. சொனாரிகா பண்டோரியா புரபாசரின் அன்னன் மகளாக இரண்டு காட்சிகள் ஒரு பாட்டு என்று தலையை காட்டி மறைகிறார். ஹிந்தி நடிகர்களான சுதன்ஷு பாண்டே மற்றும் சச்சின் கேடெக்கர் அந்நியமாக தெரிவது மைனஸ் கடைசியில் அவர்கள் இருவருக்குமான கதாபாத்திர ட்விஸ்டும் பெரிதாக அதிர வைக்க தவறுகிறது. கவுதமி தவிர நமக்கு தெரிந்த ஒரே முகமான எம் எஸ் பாஸ்கர் கிச்சி கிச்சி மூட்ட படாத பாடு பட்டு ஒரு இடத்தில ஸ்தம்பித்து நின்று விடுகிறார்.

உயர்ந்த பெரிய மலை பிரதேசம் ஓங்கி பொழியும் பிரமாண்ட நீர்வீழிகள் அடர்ந்த காடு என்று லொகேஷன்கள் அனைத்தும் அட்டகாசம். பழைய விமானம் ஒன்றில் நடக்கும் சாகசம் காட்டு மிருகங்களை பிசிறில்லாமல் காட்சிகளில் நுழைத்து கிராபிக்ஸ் பணியும் சிறப்பு. ஸ்டன் சிவாவின் சண்டை காட்சிகள் சிறப்பு அதிலும் காட்டுக்குள் ஜீப் சேசிங் பிரமாதம்.

இந்த்ரஜித்தில் மைனஸ் என்று பார்த்தால் அழுத்தமில்லாத கதாபாத்திரங்கள் மற்றும் தமிழுக்கு சம்மந்தமில்லாத நடிகர்கள் பெரும்பாலாக நடித்திருப்பது. கண்டுபிடிப்பதற்கு மிக கடினமாக உள்ள கல்லை கவுதம் எதேச்சையாக விழுந்து கைப்பற்றுவது திரைக்கதையின் பலவீனம்.

படத்தின் மிக பெரிய பலம் ராசாமதியின் அபார காமிரா மற்றும் ஜாக்கியின் ஆர்ட் டைரக்சன் புதியவர் கே பி யின் இசையும் குறை சொல்ல ஒன்றும் இல்லை. இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான படமாக இருப்பினும் விடி விஜயனின் படத்தொகுப்பு இன்னும் படத்தை வேகமாக கத்தரித்திருக்கலாம் என்று தோன்ற வைக்கிறது. சக்கரக்கட்டி என்ற இளமை துள்ளலான படத்தை தந்த கலா பிரபு சாகச படமாக இந்திரஜித்தை தர முயன்றிருக்கிறார். கதை யோசித்த விதத்திலும் காட்சியமைப்பிலும் கவர்கிறார் ஆனால் இன்னும் சற்று வலுவாக கதாபாத்திரங்களையும் திரைக்கதையையும் அமைத்திருந்தால் இன்னும் பெரிய வெற்றி கிடைத்திருக்கும் என்பதே நிதர்சனம்.

சாகசம் மற்றும் ஆக்சன் விரும்பிகள் தாராளமாக இந்திரஜித்தை பார்க்கலாம்

Rating : 2.8 / 5.0