அரசுப்பள்ளி முதல் என்கவுண்டர் வரை....! சைலேந்திர பாபுவின் திகைக்கவைக்கும் பின்னணி.....!

தமிழ்நாட்டின் 30-ஆவது டிஜிபி-(காவல்துறைத் தலைமை இயக்குனர்) ஆக இன்று பதவியேற்றுள்ளார் முனைவர் சைலேந்திரபாபு.

மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பேச்சுக்கள், உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு வீடியோக்களையும், வெளியிட்டு வரும் சைலேந்திர பாபு அவர்களுக்கு, இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரின் பேச்சிலே நாகர்கோவில் தமிழின் அழகான மொழிப்பாங்கும், மாறாத மண்வாசனையும் தெரியும். 58 வயதிலும் உடலை மிடுக்குடன் வைத்திருக்கும் இவர், பணியையும் கடமை தவறாது செம்மையாக செய்து வந்தார் என்று சொன்னால் அது நிதர்சனமான உண்மை. வாய்ச்சவடால்கள் இருக்கும் அதிகாரிகளுக்கு மத்தியில், களத்தில் இறங்கி ரவுடிகளை ஒழித்து கட்டிய பெருமை, நேர்மையான ஐபிஎஸ் அதிகாரி என்ற புகழும் இவரையே சாரும்.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு :

கடந்த 1962, ஜூன்-5-இல் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் பிறந்தவர் தான் சைலேந்திர பாபு. இவரின் தந்தை இந்திய ராணுவத்தின் கப்பல் பிரிவிலும், கேரள போக்குவரத்து துறையிலும் பணிபுரிந்துள்ளார். தனது பள்ளிப்படிப்பை அரசுப்பள்ளியில் படித்து முடித்தவர், வருடத்திற்கு ஒருமுறை தான் படித்த குழித்துறை பள்ளிக்கு சென்று தன்னுடன் படித்த மாணவர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். தனக்கு கற்பித்த பள்ளி ஆசிரியர்களையும், கல்லூரி ஆசிரியர்களையும் இன்றளவிலும் மறக்காமல், நினைவுகூர்ந்து வருவது சைலேந்திர பாபுவின் சிறப்பம்சம் ஆகும்.

கல்லூரி படிப்பை, விவசாயத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக, மதுரையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விவசாயம் படித்துள்ளார். அந்த படிப்பிற்கிடையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வெழுதி ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார். கல்லூரி சார்பாக 'பழைய மாணவர்கள் சந்திப்பு' நடந்தால், அதில் தவறாமல் கலந்து கொள்வார். தன்னுடைய ஐ.பி.எஸ் கனவிற்கு, தான் பயின்ற கல்லூரி எந்த அளவிற்கு உதவியுள்ளது என்பதை அடிக்கடி கூறுவார்.

25 வயதில் ஐ.பி.எஸ் ஆக தேர்வான பின், தன்னுடைய 9-ஆம் வகுப்பு ஆசிரியர் ராமசாமி என்பவரிடம் ஆசிர்வாதம் வாங்க சென்றுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் அவர் உயிருடன் இல்லாதது குறித்து வேதனையும் தெரிவித்துள்ளார். என்னுடைய அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்குவதை விட, என் ஆசிரியரிடம் ஆசி வாங்குவதை தான் நான் முக்கியமாக கருதினேன் என்று பேட்டி ஒன்றிலும் கூறியுள்ளார். பள்ளியில் என்.சி.சி பயிற்சிகள் கொடுத்த ஊக்கம் தான், காவல்துறையில் ஈடுபாடு வந்ததிற்கு காரணம் என்றும் அடிக்கடி நினைவு கூர்வார்.

விவசாயத்தில் முதுகலை அறிவியல் பட்டமும், எம்பிஏ, முனைவர் பட்டமும், சைபர்கிரைம் துறையில் ஆய்வுப்படிப்பையும் படித்து முடித்துள்ளார்.

தமிழகத்தில் சிறந்த அதிகாரியாக:

கடந்த 1987- ஆம் ஆண்டில், தன்னுடைய 25-ஆவது வயதில், தமிழக காவல்துறைக்கு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய காவல் பணியில் சேர்ந்தபின், 1989-இல் கோவை கோபிச் செட்டிபாளையத்தில் ஏ.எஸ்.பியாக(காவல்துறை உதவி கண்காணிப்பாளராக) தனது பணியைத் துவங்கினார். சேலம், தருமபுரி, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் எஸ்.பியாக தனது பணியை செம்மையாக செய்து வந்தார். இதையடுத்து பதவி உயர்வு பெற்றவர்,சென்னையில் இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

சென்னையில் சைலேந்திரபாபு வடக்கு மண்டல இணை ஆணையராக, கடந்த 2004 ஆம் ஆண்டு பணியாற்றினார். அச்சமயத்தில் அந்தந்த ஏரியாக்களில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடிசம் மற்றும் மாமூல் வசூலிப்பதில் ரவுடிகள் கொடிகட்டிப்பறந்தார்கள். தன்னுடைய துணிச்சலால் இதை அனைத்தையும் ஒழித்துக்கட்டியவர், வடசென்னையில் 4 ஆண்டுகள் இணை ஆணையராக பணியாற்றி ரவுடிகளின் கொட்டத்தை அடக்கினார்.

இதைத்தொடர்ந்து தன்னுடைய நேர்மையான பணி காரணமாக வடக்கு மண்டல ஐஜி, கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் டிஜிபி உள்ளிட்ட பதவி உயர்வுகள் இவரை தேடி வந்து பாராட்டுதல்களையும் பெற்றுத்தந்தது. கடந்த 2015-ல் சென்னையை வெள்ளம் புரட்டிப்போட்ட போது, தாம்பரம், பள்ளிக்கரணை, போரூர், நந்தம்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், நீச்சல் வீரர்களுடன் களத்தில் இறங்கி, பலரை வெள்ளத்தில் இருந்து மீட்டார். இதற்காக பலரிடமிருந்து பாராட்டை பெற்றார்.

கடலோர பாதுகாப்பு குழுமத்தில் இவர் பணியாற்றிய 3 ஆண்டுகளுமே சிறப்பாக இருந்தது. இதன் பிரதிபலிப்பாக
கூடுதல் கடலோர பாதுகாப்பு குழும நிலையங்கள் துவங்கப்பட்டது. கடலோர மாவட்டங்களில் இருக்கும் மீனவர்களை சேர்த்து , பாதுகாப்பு குழுமத்தை இன்னும் சிறப்பாக வலுப்படுத்தியது கூடுதல் சிறப்பம்சமாகும். தமிழக எல்லைக்குள் பிற நாட்டினர் நுழைந்திடாதபடி, தமிழக கடல் எல்லைகள் இவரது தலைமையில் தீவிரமாக பாதுகாக்கப்பட்டன.

பண ஆசையால், கள்ளத்தோணியில் சென்று பல இலங்கைத் தமிழர்கள் நடுவழியில் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்துவந்தது. இதை தடுக்கும் நோக்கில், கள்ளத்தோணி ஆசாமிகளை கண்டுபிடித்து அவர்கள் மீதி கடுமையான நடவடிக்கைளை எடுத்தார். அப்படி செல்பவர்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதால், தற்போது கள்ளத்தோணியில் வெளிநாடு செல்வது குறைந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சிறைத்துறை தலைவராக நியமிக்கப்பட்ட பின், சிறையில் பல மாற்றங்களை கொண்டுவந்தார் சைலேந்திர பாபு. கைதிகளுக்கு புத்துணர்வு அளிக்க மாரத்தான் ஓட்டப்பந்தயம், வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளிட்டவற்றை கொண்டு வந்தார். இந்த திட்டங்கள் தண்டனை முடிந்து விடுதலையாகி செல்பவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் இருந்தது . நன்னடத்தையுடன் உள்ள 700-க்கும் அதிகமான கைதிகளை விடுதலை செய்ய, தமிழக அரசிற்கு பரிந்துரை செய்தார்.இதன்பின் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலும், ரயில்வே காவல்துறை டிஜிபியாகவும் பணியாற்றினார்.


இளைஞர்களுக்கு இணையம் மூலம் அறிவுரை:

உடற்பயிற்சியில் ஆர்வமுள்ள சைலேந்திர பாபு என்னென்ன ஆரோக்கியமான உணவுகள் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும், எப்படி எளிமையான உடற்பயிற்சிகள் செய்யலாம் என்பதை இணையத்தில் வீடியோவாக பதிவிடுவார். சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவரின் அறிவுரை வீடியோக்கள் இன்றும் இணையத்தில் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றனர்.

புத்தகங்கள் எழுதுவதில் தீராக்காதல் கொண்ட சைலேந்திர பாபு, உனக்குள் ஒரு தலைவன், சிந்தித்த வேளையில், உங்களுக்கான 24 போர் விதிகள், அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும், உடலினை உறுதி செய், சாதிக்க ஆசைப்படு, YOU TOO BECOME AN IPS OFFICER, BE AMBITIOUS, PRINCIPLES OF SUCCESS IN INTERVIEW, A GUIDE OF HEALTH AND HAPPINESS, அமெரிக்காவில் 24 நாட்கள், உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

25 நிமிட போட்டியில் வெற்றி பெற 25 வருட பயிற்சி தேவைப்படும், மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்ற இவரின் பொன்னான வார்த்தைகள், அவரின் வாழ்க்கை வெற்றிக்கும், இளைஞர்கள் முன்னேற்றத்திற்கும் உதவியாக இருக்கும் பொன்மொழியாகும்.

சிறப்பம்சம்:

சென்னை பல்கலைக் கழகத்தில், இவருடைய 'Missing children' என்ற ஆராய்ச்சி கட்டுரைக்காக முனைவர் பட்டத்தை பெற்றார்.

30 ஆண்டுகள் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, குடியரசுத் தலைவர் விருது, வீரதீர செயலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, கடமை உணர்வுக்கான தமிழ்நாடு அரசின் விருது , உயிர்காப்பு நடவடிக்கைக்காக 'பாரதப்பிரதமரின் பதக்கம், சந்தன கடத்தல் வீரப்பனை பிடிக்க அதிரடி படையில் பணியாற்றியதற்காக 'முதல்வர் பதக்கம்' உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவரை இன்ஸ்பிரேஷனாக வைத்தே நடிகர் சூர்யா 'காக்க காக்க' படத்தில் நடித்ததாகவும் கூறியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பாகும்.

கோவை என்கவுண்டர்:

கோவையில் நடைபெற்ற மாபெரும் மாநாடான கலைஞரின் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை சிறப்பாகவும், செம்மையாகவும் நடத்தியதில் இவரின் பங்கு பெரும்பான்மையானதாகும்.

கோவையில் 2010- 2011 உள்ளிட்ட வருடங்களில், காவல் ஆணையராக பணியாற்றிய போது, பாலியல் குற்றவாளியை என்கவுண்டர் செய்துள்ளார். கோவை ரங்கே கவுடர் வீதியில் ஜவுளிக்கடை நிறுவனரின் இரண்டு குழந்தைகளை பாலியல் காரணத்திற்காக, கால் டாக்சி ட்ரைவர் மோகன்ராஜ் கடத்தி கொலை செய்தான். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில், மக்கள் கொந்தளிப்புடன் இருந்த சமயத்தில், போலீசார் கொலைகாரனையும், அவனது கூட்டாளியையும் கைது செய்தனர். இதையடுத்து நடந்த என்கவுன்டரில் மோகன்ராஜ் கொல்லப்பட்டான். இதற்காக அப்போதைய முதல்வராக இருந்த கலைஞரிடமும், எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதாவிடமும் பாராட்டுதல்களைப் பெற்றார்.

சாதாரண ஏ.எஸ்.பியாக தன்னுடைய பணியை துவங்கிய சைலேந்திர பாபு, பின் நாட்களில் சிறப்பு அதிரடிப்படைத் தலைவர், காவல்துறை ஆணையாளர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர், கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி, ரயில்வே டி.ஜி.பி என்ற பல உயர்பதவிகளை வகித்து, காவல்துறைக்கே பெருமை சேர்த்தவர், இத்துணை வீரச்செயல்களை செய்து, மக்களுக்காக அரும்பணியாற்றி வரும் சைலேந்திர பாபு தான் தமிழகத்தில் தற்போதைய டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார், அவர்சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்....!

 

More News

மணிகண்டன், நடிகை சாந்தினி சம்பவம்....! வாக்குமூலம் அளித்த மருத்துவர்....!

மாஜி அமைச்சர் மணிகண்டன், நடிகை சாந்தினியை பிரபல தனியார்ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றது குறித்த ஆதாரங்கள், தற்போது காவல்துறையினர் கையில் சிக்கியுள்ளது.

அதிபருக்கு 15 மாதம் சிறை தண்டனை? அதிர்ச்சி சம்பவம்!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவிற்கு அந்நாட்டு

தடுப்பூசி தட்டுப்பாட்டை அடுத்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்திற்கு தற்போது மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 21/2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும்

அசுர வேகத்தில் உடல் எடையை குறைக்க உதவும் ஸ்கிப்பிங் விளையாட்டு? எளிய டிப்ஸ்!

சிறிய வயதில் கையில் கிடைக்கும் கயிறுகளை வைத்துக் கொண்டு ஸ்கிப்பிங் விளையாடி இருப்போம்.

பா ரஞ்சித்தின் 'சார்பாட்டா பரம்பரை' ரிலீஸ் குறித்த தகவல்: ரசிகர்கள் அதிருப்தி!

ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்