பேர் வச்சாலும் வைக்காம போனாலும்… ஹிட் பாடலின் ரகசியத்தை உடைத்த இசைஞானி!

  • IndiaGlitz, [Tuesday,September 21 2021]

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் “டிக்கிலோனா“. டைம் டிராவல் கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற “பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்“ ரீமேக் பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தது.

1990 களில் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த “மைக்கேல் மதன காமாராஜன்“ திரைப்படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட் அடித்த பாடல்தான் இந்த “பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்“. கவிஞர் வாலி வரிகளில் மலேசியா வாசுதேவன் மற்றும் ஜானகி குரலில் உருவான இந்தப் பாடலை இசைஞானி இளையராஜா உருவாக்கி இருந்தார். தற்போது மீண்டும் இந்தப் பாடலை “டிக்கிலோனா“ படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா ரீமேக் செய்து ரசிகர்களிடையே பிரபலமாக்கி இருக்கிறார்.

ரீமேக் செய்யப்பட்ட இந்தப் பாடல் யூடியூபில் மட்டும் 10 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த ஹிட் பாடல் உருவான விதம் குறித்து இசைஞானி இளையராஜா கூறும் வீடியோ ஒன்றை யுவன்சங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில் கவிஞர் வாலியிடம் இசைஞானி தனது புதுப்பாடலுக்கான மெட்டு குறித்து பேசும்போது “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” எனும் திருக்குறளை எடுத்துக் காட்டி இதேபோன்று அச்சாரம் கொண்ட வரிகள் வேண்டும் எனக்கேட்டுக் கொண்ட ரகசியத்தை தற்போது பொதுவெளியில் கூறியுள்ளார்.

ஆக “பேர் வச்சாலும் வைக்காமல் போனாலும் மல்லி வாசம்” எனும் பாடலுக்கான மெட்டு திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்டது எனும் ரகசியத்தை தற்போது இசைஞானி இளையராஜா தனக்கே உரிய பாணியில் சுவாரசியமாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.