ஐபிஎல் திருவிழா ஆடுகளம்: சென்னை – கொல்கத்தா

கொல்கத்தா கனவில் கல்லைப்போட்ட சென்னை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

துபாயில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டபோதும், கொல்கத்தா அணிக்கான அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும் போட்டி என்பதால் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

மூன்று மாற்றங்கள்

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் ஃபாப் டூ பிளஸி, மோனு குமார், இம்ரான் தாஹிர் ஆகியோர் நீக்கப்பட்டு ஷேன் வாட்சன், லுங்கி நிகிடி, கரண் ஷர்மா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் பிரசித் கிருஷ்ணாவிற்கு பதில் ரிங்கு சிங் இடம் பிடித்தார்.

ராணா அசத்தல்

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சுப்மான் கில் (26) சுமாரான துவக்கம் அளித்தார். அடுத்து வந்த சுனில் நரேன் (7) வந்த வேகத்தில் வெளியேறினார். ஒருபுறம் அடுத்தடுத்து விக்கெட் சரிந்தபோதும் மறுபுறம் சென்னை பவுலர்களை சமாளித்து ஆடிய நிதீஷ் ராணா அரைசதம் கடந்தார்.

பின் வந்த ரிங்கு சிங் (11) கேப்டன் மார்கன் (15) என யாரும் நிலைக்கவில்லை. இதன் பின் ராணா அதிரடி காட்ட துவங்கினார். கரண் ஷர்மா சுழலில் ரானா ஹாட்ரிக் சிக்சர் பறக்கவிட்டார். இதன் பின் இவர் 87 ரன்கள் எடுத்திருந்தபோது, நிகிதி பந்தில் அவுட்டானார். ஐபிஎல் அரங்கில் தனது அதிகபட்ச ஸ்கோரை ராணா நேற்று பதிவு செய்தார்.

தொடரும் சொதப்பல்

சென்னை அணி பவுலர்களின் கடைசி நேர சொதப்பல் இப்போட்டியிலும் தொடர்ந்தபடி இருந்தது. முதல் 15 ஓவர்களில் கொல்கத்தா அணி வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் கடைசி 5 ஓவர்களில் கொல்கத்தா அணி 66 ரன்கள் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டில் இந்த சொதப்பல் பவுலிங்கிற்கும் விடை காண வேண்டிய சூழலில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது. கொல்கத்தா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்தது.

வேலைக்கு ஆகாத வாட்சன்

எட்டக்கூடிய இலக்கைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாட்சன், கெய்க்வாட் ஜோடி துவக்கம் அளித்தது. பவர் ப்ளே எனப்படும் முதல் ஆறு ஓவரில் சமாளித்து ஆடிய இந்த ஜோடி 44 ரன்கள் எடுத்தது. அதன் பின் வாட்சன் (14) வெளியேறினார். சீனியர் வீரரான வாட்சன் விரைவில் விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பது இந்தத் தொடர் தெரியப்படுத்தியுள்ளது எனலாம்.

சூப்பர் ஜோடி

பின் இணைந்த அம்பத்தி ராயுடு, கெய்க்வாட் ஜோடி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்ததோடு, சீரான இடைவேளையில் பவுண்டர்களும் சிக்சர்களுமாகப் பறக்கவிடத் தவறவில்லை. கொல்கத்தா பவுலர்களை நாலாபுறமும் இந்த ஜோடி சிதறவிட, சென்னை அணியின் ரன் வேகம் வேகமெடுத்தது. இந்நிலையில் கம்மின்ஸ் பந்தில் ராயுடு (38) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் தோனி (1) வருண் சக்கரவர்த்தி சுழலில் போல்டானார்.

திருப்பம் தந்த ஜடேஜா

தோனியைத் தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாடும் (72) வெளியேற, அதுவரை நன்றாகச் சென்றுகொண்டிருந்த சென்னை அணி சறுக்கலைச் சந்தித்தது. கடைசிக் கட்டத்தில் வெற்றி பெற 12 பந்துகளில் 30 ரன்கள் தேவை என்ற நிலையை எட்டியது. இந்நிலையில் கொல்கத்தா வீரர் ஃபர்குசன் வீசிய போட்டியின் 19ஆவது ஓவரில் ஒரு சிக்சர், இரு பவுண்டரிகள் என ரவீந்திர ஜடேஜா பறக்கவிட, சென்னை அணி அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் எடுத்தது. ஃபர்குசன் வீசிய நோபாலும் ஜடேஜாவுக்குக் கைகொடுத்தது.

கடைசி ஓவரில் 10 ரன் எடுக்க வேண்டிய நிலையில் முதல் நான்கு பந்துகளில் வெறும் 3 ரன்கள் மட்டுமே சென்னை அணி எடுத்தது. ஆனால் ஐந்தாவது, ஆறாவது பந்தில் ஜடேஜா இரண்டு சிக்சர்கள் பறக்கவிட, சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பைக்குக் கொண்டாட்டம்

இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பின் கனவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய இடியை இறக்கியுள்ளது எனலாம். கொல்கத்தாவின் சறுக்கலால் சென்னை அணியின் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாகத் தகுதி பெற்றது. இனி மும்பை இரு போட்டிகளில் தோற்றாலும் அதன் பிளே ஆஃப் இடம் பறிபோகாது என்னும் நிலை கொல்கத்தாவின் தோல்வியால் உருவாகியுள்ளது.

இனி எஞ்சியுள்ள போட்டிகளின் முடிவின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ஃபைனலுக்கு முன்னேற இரு வாய்ப்புகள் கிடைக்கும்.

மிகப் பெரிய வில்லன்

இப்போட்டியில் கொல்கத்தா வீரர் லூக்கி ஃபெர்குசன் வீசிய போட்டியில் 19ஆவது ஓவர் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதற்கு முந்தைய ஓவரை வீசிய பெர்குசன் சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் 19ஆவது ஓவரில் யார்க்கர்கள் வீச முயற்சித்த அவருக்கு மைதானத்தின் ஈரப்பதம் பெரிய வில்லனாக அமைந்தது. கேப்டன் மார்கன் ஒவ்வொரு பந்துக்கு ஒருமுறை பந்தைத் துடைத்துக் கொடுத்தும் உதவவில்லை.

சுருக்கமான ஸ்கோர்:

கொல்கத்தா: 172/5 (20 ஓவர்கள்)

சென்னை: 178/4 (20 ஓவர்கள்)

ஆட்ட நாயகன்: ருதுராஜ் கெய்க்வாட்

More News

அண்ணா அறிவாலயத்தில் ஒட்டப்பட்ட ரஜினி ஆதரவு போஸ்டர்: சென்னையில் பரபரப்பு

கடந்த இரண்டு நாட்களாக ரஜினி வெளியிட்டதாக ஒரு கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த கடிதம் குறித்து நேற்று டுவிட்டரில் ரஜினிகாந்த் விளக்கமளித்தார்.

நாளை நடக்கவிருக்கும் நிலவின் கொண்டாட்டம்… புளூ மூன் நிகழ்வு!!!

புளூ மூன் என்றால் உடனே நிலா புளூ நிறமாகத் தெரியுமா எனச் சிலர் கேட்பது உண்டு. ஆனால் நிலா எப்போதுமே புளூ கலராகத் தெரியாது என்பதுதான் நிதர்சனம்.

அட்லியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தை இயக்கிய அட்லி, அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், இது குறித்த ஆரம்பகட்ட பணிகளை அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

'கமல்ஹாசன் 232' போட்டோஷூட்: நவம்பர் 7ல் விருந்து கிடைக்குமா?

உலகநாயகன் கமல்ஹாசனின் 232ஆவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஆஜித், ஷிவானியே கலாய்ச்சிட்டாங்களே! அனிதாவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் முடியவிருக்கும் நிலையில் ஷிவானி கூட ஓரளவுக்கு பேச ஆரம்பித்துவிட்டார். பேச ஆரம்பித்து விட்டார் என்று சொல்வதைவிட ரொமான்ஸ்