தமிழக அரசின் புதிய தலைமை செயலாளர்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு!

தமிழக முதல்வராக இன்று முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் முதல்வராக பதவியேற்ற முக ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல்வர் பணியை தொடங்கினார் என்பதும் அடுத்தடுத்து 5 அதிரடி கோப்புகளில் கையெழுத்திட்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் முதல்வரின் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம் மற்றும் அனுஜார்ஜ் ஆகிய நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டார்கள் என்ற செய்தி கடந்த சில மணி நேரங்களுக்கு முன் வெளியானது. இதனை அடுத்து தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் எழுத்தாளர், பத்திரிகையாளர், கல்வியாளர், மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது உள்ள கொரோனா வைரஸ் காலகட்டத்தில் இறையன்பு போன்ற திறமையான அதிகாரி தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டது சரியான நடவடிக்கை என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.

மேலும் இதுவரை தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.