ஒரு நபரை “பேய்“ எதனால், எப்படி பிடிக்கிறது? இதற்குத் தீர்வுதான் என்ன?

  • IndiaGlitz, [Friday,July 09 2021]

முன்பெல்லாம் பேய் ஓட்டுவதற்கு என்றே ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு சாமியார் இருப்பார். சரி கிராமங்களில்தான் இப்படி அறிவில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று போகிற போக்கில் நாம் கருத்து சொல்லிக் கொண்டு இருந்தோம். ஆனால் நாகரிகம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில்கூட பெரும்பாலான டிவி சீரியல்களில் “பேய்“ பிரதான இடம்பிடித்து விட்டது. அதோடு பேய் ஓட்டுகிறேன் என்ற பேர்வழியில் சிறுவர்களை அடித்தே கொல்லும் விஷயங்களும் அதிகரித்து விட்டன.

சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பேய்பிடித்து விட்டதாகக் கூறி, ஒரு சிறுவனை ஒட்டுமொத்த குடும்பமே சேர்ந்து அடித்து கொன்ற அவலம் அரங்கேறியது. இதனால் பேய் என்ற அமானுஷ்யத்தை மட்டும் மனித மனம் அவ்வளவு எளிதாக மறப்பதில்லை என்பது தெளிவாகிறது. இந்நிலையில் இதற்கு என்ன காரணம்? இந்த நிலைமையை எப்படி மாற்றுவது? என விளக்குகிறார் மனநல மருத்துவர்.

பொதுவா இறந்துபோன ஒருவரின் ஆன்மா, உயிரோடு இருக்கும் இன்னொரு நபரை பிடித்துக் கொண்டால் (உடலுக்குள் சென்றுவிட்டால்) பேய் பிடித்து விட்டது எனக் கூறுகின்றனர். இப்படி பேய்பிடித்துவிட்ட ஒரு நபர்  உளறுவது, மாறுபட்டு பேசுவது, மெய்மறந்த நிலைக்குப் போவது என அறிகுறிகளை வெளிப்படுத்துவாராம். அதோடு மற்றவர்களைப் போட்டு அடிப்பது, கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி எறிவது, சில நேரங்களில் அமைதியாக இருப்பது போன்ற அறிகுறிகளையும் பேய்பிடித்து விட்டதற்கு கூறுகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் நடமாடுவது, பழைய பங்களா, அடர்ந்த காடு போன்ற இடங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பிய உடன் பேய் பிடித்து விட்டதாகவும் கூறுகின்றனர். அதேபோல சமீபத்தில் இறந்துபோன ஒருவரைப் பற்றியே பேசுவது, மர்மமான இடங்களைப் பற்றி அடிக்கடி கட்டுக்கதைகளை கூறிக்கொண்டே இருப்பது இதுபோன்ற நிகழ்வுகளை ஒட்டியும் சிலருக்கு பேய் பிடித்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் பேய் பிடித்துவிட்டதாக இப்படி பலரும் நம்பிக்கொண்டு இருக்கும் இதுபோன்ற அறிகுறிகளை மனநல மருத்துவர்கள் ஆளுமைச் சிதைவு (Dissociation) என்றே கூறுகின்றனர். அதாவது ஒரு நபரின் இயல்பு என்பது வெறும் உடலை சார்ந்தது மட்டுமல்ல. அவரின் மனநலத்தை சார்ந்ததும்தான். ஒருவர் மன அழுத்ததாலோ அல்லது ஒரு சில சம்பவங்களாலோ பாதிக்கப்பட்டு இருக்கும்போது அந்த நபர் மாறுபட்டு பேசுவது, சுயநினைவின்றி நடந்து கொள்வது போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறார். இதனால் பேய்பிடித்தல் எனும் அறிகுறிகளை மனநல மருத்துவர்கள், மனநலப் பிரச்சனைகளாகவே அணுகுகின்றனர்.

மேலும் மனரீதியாக ஒரு நபர் பாதிக்கப்படும்போது அவருக்கு தன் ஒருமைப்பாடு Self-identity குறைந்து போகும் என்றும் இதனால் அவரது உடலும் மனதும் ஒரே நேர்க்கோட்டு பாதையில் இல்லாமல் இயல்புக்கு மாறான செயல்களை செய்ய ஆரம்பித்து விடுகிறார் என்றும் கூறுகின்றனர். எனவே மனரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு நபரை குச்சியால் அடித்துத் துன்புறுத்துவது அல்லது கோயில்களுக்கு கூட்டிச்சென்று அவரை வலுக்கட்டாயமாக தண்ணீரில் போட்டு அழுத்துவது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்றும் இதுபோன்ற செயல்கள் அவருடைய மனநலத்தை மேலும் பாதிக்கும் என்றும் அவர்கள் கருத்து கூறுகின்றனர்.

பேய் ஒட்டுவதால் ஒரு சிலர் இதுபோன்ற அறிகுறிகளில் இருந்து வெளிவந்து விடுகிறார்களே என்ற கேள்வியும் எழலாம். உடலும், மனமும் ஒன்றி இல்லாமல் மனஅழுத்ததால் குன்றி போய் இருக்கும் ஒரு நபரை சாட்டையால் அடிக்கும்போது, அவர் அந்த நேரத்தில் உடனடியாக சுயநினைவுக்கு திரும்பிவிடலாம். ஆனால் இது நிரந்தரமான தீர்வு இல்லை என்பதையும் மருத்துவர்கள் தெளிவுப் படுத்துகின்றனர்.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம் எனும் மருத்துவர்கள் இதை மனநலம் சார்ந்தே தீர்க்க வேண்டும் என்கின்றனர். இதற்காக அந்த நபருக்கு கவுன்சிலிங் சைக்காலஜி கொடுத்து அவர் கூறுவதை பொறுமையாகக் கேட்டு பிரச்சனையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவருடைய மனஅழுத்தத்திற்கு மாத்திரைகளை கொடுத்து அவரை மன வலியில் இருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.