Download App

Ivan Thanthiran Review

கவுதம் கார்த்திக் நடிப்பில் ’ரங்கூன்’ படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் ஆர்.கண்ணன் இயக்கியிருக்கும் ‘இவன் தந்திரன்’ வெளியாகியிருக்கிறது. ’ரங்கூன்’ மூலம் கவுதம் கார்த்திக்கு கிடைத்த நற்பெயரும் நன்மைகளும் தொடரும் வகையில் இந்தப் படம் அமைந்திருக்கிறது.

சக்தி (கவுதம் கார்த்திக்) மற்றும் அவனது நண்பன் பாலாஜி இருவரும் பொறியியல் பட்டதாரிகள். ரிவர்ஸ் எஞ்சினியரிங் எனப்படும் தொழில்நுட்பம் மூலம் பெரிய நிறுவனங்களின் தொழில்நுட்பத்தைக் காப்பி அடித்து லேப்டாப், மொபைல்போன் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்கும் கடை வைத்திருக்கிறார்கள்.

மத்திய மனிதவளத் துறை அமைச்சரான தேவராஜ் (சூபப்ர் சுப்புராயன்) போதுமான வசதிகள் இல்லாததைக் காரணம் கட்டி, தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூட உத்தரவிடுகிறார். சில நாட்களில் கல்லூரிகளுக்கு அவகாசம் கொடுத்து தன் உத்தரவை நிறுத்திவைக்கிறார். சம்பந்தப்பட்ட கல்லூரிகளிலிடமிருந்து பெரும் லஞ்சம் வாங்குவதற்காகவே அவர் இப்படிச் செய்கிறார் என்பது தெரியவருகிறது. அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க, கல்லூரிகள் புதுப் புதுக் கட்டணங்களை மாணவர்கள் மீது சுமத்துகின்றன. இதனால் பாதிக்கப்படும் ஒரு ஏழை மாணவர் தற்கொலை செய்துகொள்கிறார்.

ஏற்கனவே அமைச்சரால் ஏமாற்றப்பட்ட சக்தி அவரது ஊழலை அம்பலப்படுத்தும் பொருட்டு தனது தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி அமைச்சர் லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ ஆதாரத்தை உருவாக்கி, அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றுகிறான்.இதன்மூலம் பெரும் மாணவர் போராட்டம் வெடிக்கிறது. இதனால் தேவராஜின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது.

தன் அமைச்சர் பதிவி பறிபோனதற்குக் காரணமான சக்தியைத் தேடிக் கொல்வதற்கான வேட்டையைத் தொடங்குகிறான் தேவராஜ். அதோடு தனக்கெதிரான ஆதாரத்தை அழிக்கவும் தனது பண பலத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்துகிறான்.

இதையடுத்து தேவராஜ் தப்பித்துவிடாமல் இருக்க சக்தி என்ன செய்கிறான்? தேவராஜ் மூலம் அவனது உயிருக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து  எப்படித் தப்பிக்கிறான்? இவற்றுக்கான பதில்கள்தான் மீதிக் கதை.

வழக்கமான நாயகனின் அறிமுகக் காட்சிகள், அறிமுகப் பாடல் மற்றும் சுமாரான தொடக்கக் காட்சிகளால் சற்று சலிப்பு ஏற்படுகின்றன. ஆனால் வில்லன் கதாபாத்திரம் அறிமுகமான நொடியிலிருந்து படம் சூடுபிடிக்கத் தொடங்குகிறது. அதிலிருந்து படத்தின் இறுதிவரை பெருமளவில் ரசிகர்களின் கவனத்தைத் தக்கவைக்கும்வகையில் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது திரைக்கதை.

இயக்குனர் கண்ணன்,  கல்வியை பாதிக்கும் ஊழல் என்ற கதைக் களத்தில் இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் சாத்தியக் கூறுகளைப் பயன்படுத்தி ஒரு சுவாரஸ்யமான அதே சமயம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நெருக்கமாக உணரக்கூடிய விஷயத்தை சரியாகப் பேசியிருக்கும் கமர்ஷியல் படத்தைத் தந்திருக்கிறார். படத்தில் பயன்படுத்துப்படும் டெக்னிக்கல் சங்கதிகள் கொஞ்சம் காதில் பூசுற்றுவதுபோல் தோன்றினாலும் திரைக்கதையின் சுவாரஸ்யத்தைக்கூட்ட உதவுகின்றன. அதோடு இந்த டெக்னிக்கல் அம்சங்கள் ரசிகர்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் கையாளப்பட்டுள்ளன.

படத்தின் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் பெருமளவில் தக்கவைக்கப்பட்டிருப்பதோடு பல இடங்களில் ரசிக்கத்தக்க பொழுதுபோக்கு அமசங்களும் கச்சிதமாகப் பொருத்தப்பட்டுள்ளன. ஆர்ஜே பாலாஜியின் காமடி வசனங்கள் நாம் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்கள் பற்றிய எதார்த்தமான கிண்டல்கள் ஆகியவை தியேட்டரில் சிரிப்பலையை எழுப்பத் தவறுவதில்லை.

படத்தில் நடுத்தர வர்க்க பொறியியல் கல்லூரி மாணவி ஆஷாவாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கும் கவுதம் கார்த்திக்கும் ஏற்படும் காதல் தேவையற்ற திணிப்பாக இல்லாமல் கதையுடன் இணைந்து வருகிறது. அந்தக் காட்சிகளும் டூயட் பாடல்களும் ரசனையுடன் படமாக்கப்பட்டிருப்பது அவற்றை ரசிக்க வைக்கின்றன. சில காதல் வசனங்களில் கண்ணனின் குருநாதர் மணிரத்னத்தின் முத்திரை பளிச்சிடுகிறது.

இவற்றோடு இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக பண மதிப்பிழப்பு (டிமானிடைசேஷன்) விவகாரத்தை திரைக்கதையில் கச்சிதமாகப் பயன்படுத்தியிருப்பதைச் சொல்லலாம். டிமானிடேசேஷனை கடைசி காட்சிகளின் நகர்வுக்கும் படத்தை முடிப்பதற்கும் அழகாகப் பயனபடுத்தியிருப்பதில் இயக்குனரின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.

என்னதான் தொழில்நுட்பத்தில் கில்லியாக இருந்தாலும் ஒரு மத்திய அமைச்சரை நாயகன் வீழ்த்தும் விதத்தில் நம்பகத்தன்மை மிகக் குறைவு. அதேபோல் வில்லன் பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலுவாக அமைத்திருக்க வேண்டும். நாயகனைக் கண்டுபிடிக்க அவன் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் தோற்பதும் இறுதியில் நாயகன் விரித்த வலையில் தானாக வந்து விழுவதும் நம்புபடியாக இல்லை. இவை மட்டுமே படத்தின் குறைகள்.

கவுதம் கார்த்திக் பாத்திரத்துக்குத் தேவையான அனைத்தையும் சரியாகக் கொடுத்து நல்ல பெயர் வாங்குகிறார். தமிழ் உச்சரிப்பில் மற்றும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். .

ஷ்ரத்தா ஸ்ரீநாத் அணியும் உடைகளும் மேக்கப்பும் அவரை மிடில் கிளாஸ் பெண் என்று நம்பவைக்கத் தவறுகின்றன, ஆனால் அவர் தோற்றத்திலோ நடிப்பிலோ குறை ஒன்றும் இல்லை. ஓரளவுக்கு வலுவான நாயகி பாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்.

ஆர்ஜே பாலாஜி படம் முழுக்க வந்து வசனங்களால் கலகலப்பூட்டுகிறார். சீரியஸ் காட்சிகளிலும் சரியாக நடிக்கிறார்.

சூப்பர் சுப்பராயன் வில்லன் வேடத்துக்குக் கச்சிதமான தேர்வு. அவரது அடியாளாக வரும் ஸ்டண்ட் சில்வாவும் நல்ல நடிப்பைத் தந்திருக்கிறார்.

தமன் இசையில் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் நன்றாக உள்ளன. ‘மெதக்கவிட்டா’ பாடல் திரையரங்கை விட்டு வெளியேறிய பின்னும் மனதில் தங்குகிறது. பின்னணி இசை பொருத்தமாக உள்ளது.பிரசன்னா குமாரின் ஒளிபப்திவு திரைக்கதைக்கு தக்க துணை புரிகிறது. செல்வா ஆர்.கேயின் படத்தொகுப்பு படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது.

மொத்தத்தில் பொறியியல் கல்வி மற்றும் மாணவர்களின் எதிர்காலம் மீது உண்மையான அக்கறையை வெளிப்பத்தியிருக்கும் ரசிக்கத்தக்க கமர்ஷியல் படமாக அமைந்திருக்கிறது ‘இவன் தந்திரன்’.

Rating : 3.0 / 5.0