கிரிக்கெட்டில் மெகா சாதனைப் படைத்த வீரர்… மைல்கல் வீடியோ வைரல்!

இங்கிலாந்து கிரிக்கெட்டின் அதிரடி ஆட்டக்காரரும் நம்பிக்கை நட்சத்திரமுமான ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 1,000 ஆவது விக்கெட்டை வீழ்த்தி உலகச் சாதனை படைத்து இருக்கிறார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான இவர் தற்போது முதல்தர கிரிக்கெட்டில் 1,000 ஆவது விக்கெட்டை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுன்ட்டி கிரிக்கெட்டில் லான்கஷைர் அணிக்காக விளையாடிவரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 1,000 ஆவது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். மேலும் கென்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்களுக்கு 7 விக்கெட்டை வீழ்த்தி அந்த அணியை திண்டாட வைத்துள்ளார். இதனால் அந்த அணி 34 ரன்களுக்குள் 8 விக்கெட்டை இழந்து தடுமாறியதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இங்கிலாந்து அணிக்காக 162 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜேம்ஸ் ஆண்டர்சன் இதுவரை 617 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற பெருமையோடு தொடர்ந்து விளையாடி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டைத் தவிர 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். தற்போது அனைத்துப் போட்டிகளிலும் 1,000 விக்கெட்டுகளை வீழ்த்தி புது சாதனையைத் தொட்டு இருக்கிறார்.

38 வயதாகும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதன் முதலில் கடந்த 2003 ஆம் ஆண்டில் விளையாட தொடங்கினார். இதுவரை 162 டெஸ்ட் போட்டிகள், 194 ஒருநாள் போட்டிகள் என்று இன்னும் அவருடைய சாதனை பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.