மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரம்மாண்ட நினைவிடம்.. தொண்டர்கள் மத்தியில் எழுச்சி பெற்ற தமிழக முதல்வர்!

சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 50,422 சதுர அடியில் 80 கோடி ரூபாய் செலவில் ஃபீனிக்ஸ் பறவையின் வடிவத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நினைவு மண்டபத்தை இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவிற்காக லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மெரினா கடற்கரையில் ஒன்று கூடினர்.

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மே 8, 2018 ஆம் ஆண்டு துவக்கி வைத்தார். இதன் கட்டுமானப் பணி நிறைவுற்று நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோரும் மலர் வளையம்வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர், நூறு ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்றும் எஃகு கோட்டை என்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்ட பேரவையில் பேசியதை நினைவு கூர்ந்தார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியைத் தொடர செய்வதே நமது லட்சியம் என்றும் ஜெயலலிதா ஆட்சி தொடர நாம் வீர சபதம் ஏற்போம் என்றும் முதல்வர் சூளுரைத்தார். முதல்வரின் இந்த ஊரைக்கு அங்கு திரண்டு இருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் கரகோஷங்களை எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த நினைவிடம் 9.09 ஏக்கர் மொத்த பரப்பளவில் ஐஐடி தொழில்நுட்ப கலைஞர்களைக் கொண்டு ஃபீனிக்ஸ் வடிவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும் உப்புக் காற்றால் பாதிப்பு ஏற்படாதவாறு கான்கிரீட் மேற்பரப்புகள் அமைக்கப் படடுள்ளன. 8,555 சதுர அடி பரப்பளவில் சிறந்த கட்டிட வடிவமைப்புடன் அருங்காட்சியகமாக இந்த நினைவிடம் காட்சி அளிக்கிறது. இதில் மெழுகு சிலைகள் மற்றும் புகைப்பட அமைப்புகள் இடம் பெற்றுள்ளன.

நினைவிடத்தின் பக்கவாட்டில் உயர்தர பளிங்கு கற்களும் தரைப் பகுதியில் உயர்தர கருங்கற்களும் பதிக்கப்பட்டு உள்ளன. நினைவிட வளாகத்தில் சுமார் 8,500 சதுர அடி பரப்பளவில் அறிவுத்திறன் பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் 110 அடி நீளத்திற்கு இருபுறமும் மேற்கூரை கூடிய நடைபாதையும் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதை மேற்கூரைகளின் மீது சூரிய ஒளி சேமிப்பு தகடுகள் பதிக்கப்பட்டு உள்ளன. இதன் மூலும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின்தேவைக்கு பயன்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நினைவிடத்திற்கு அழகுப்படுத்தும் வகையில் சிறந்த செடிகள் மற்றும் மரங்கள் நடப்பட்டு உள்ளன. தோட்டக்கலை வல்லுநர்களின் ஆலோசனைகளின்படி பல்வகை நாட்டு மரங்களை கொண்டு மியாவாக்கி தோட்டம் இங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதன் நுழைவாயிலில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளது.

நினைவிடத்தின் இருபுற நுழைவு பகுதிகளிலும் ஆண் சிங்க வடிவில் கருங்கற்களால் ஆன சிலை வைக்கப்பட்டு உள்ளது. மின்சார வசதி, அலங்கார வண்ண மின் விளக்குகள், கண்காணிப்பு கேமிரா வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் இந்த நினைவிடத்தில் அணையா விளக்கும் பொருத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில் பிரம்மாண்ட நினைவிடத்தை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதல்வருக்கு அதிமுக தொண்டர்கள் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.