'சங்கமித்ரா'வை முந்தும் ஜெயம் ரவியின் படம்

  • IndiaGlitz, [Tuesday,December 05 2017]

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பட்ஜெட் படமான 'சங்கமித்ரா' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ளது. ஜெயம் ரவி, ஆர்யா, திஷா பதானி உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படம் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்த 'டிக் டிக் டிக்' திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து அவர் சங்கமித்ரா' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் புதிய தகவலின்படி சங்கமித்ராவுக்கு முன்பே ஒரு குறுகிய கால படத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இம்மாத இறுதியில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கும் இந்த படம் ரொமான்ஸ் மற்றும் காமெடி படம் என்று கூறப்படுகிறது.