பயிர்க்கடனைத் தொடர்ந்து நகைக்கடனும் தள்ளுபடி… தமிழக முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். முன்னதாக கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்டு இருந்த பயிர்க்கடனை தள்ளுபடி செய்த தமிழக முதல்வர் தற்போது நகைக் கடனையும் தள்ளுபடி செய்து இருக்கிறார்.

தமிழகச் சட்டச்சபையில் கடந்த 23 ஆம் தேதி 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவை விதி எண் 110 இன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.

அதில் விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளுக்காக கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைத்துப் பெற்ற நகைக் கடன்களில் 6 சவரன் வரை அடமானம் வைத்துப் பெறப்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அத்துடன் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்புக்கு பொது மக்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.