11 ஆம் வகுப்பில் சேர விண்ணப்பித்து இருக்கும் ஜார்கண்ட் மாநிலக் கல்வி அமைச்சர்!!! பரபரப்பு தகவல்!!!

  • IndiaGlitz, [Tuesday,August 11 2020]

 

ஜார்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சராகவும் மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் ஜகர்நாத் மஹ்தோ (53) நேற்று 11 வகுப்பில் சேர விண்ணப்பித்து இருக்கிறார் என்ற தகவல் அம்மாநிலத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொது இடங்களில் இவரது கல்வித் தகுதி குறித்து தொடர்ந்து விமர்சனம் எழுந்ததால் மஹ்தோ இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் அறிவு மற்றும் கற்றலுக்கு வயது ஒரு தடையில்லை என்றும் அவர் செய்தியாளர் மத்தியில் பேசியிருக்கிறார்.

25 வருடங்களுக்குப் பிறகு தனது கல்வியை மீண்டும் தொடரும் அமைச்சர் மஹ்தோ அம்மாநிலத்தின் போகாரே மாவட்டத்தில் உள்ள தேவி மஹ்தோ இண்டர் கல்லூரியில் சேர விண்ணப்பத்தை அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற அம்மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் கிரிடிஷ் மாவட்டத்தின் டுமரி சட்டமன்றத் தொகுதியில் நின்று இவர் வெற்றிப்பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனது 11 ஆம் வகுப்புக்கு அரசியல் மற்றும் அறிவியலோடு இணைந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து இருக்கும் அமைச்சர் உயர்கல்விக்கு கலை பிரிவை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1995 ஆம் ஆண்டு மெட்குரிலேஷன் பிரிவில் இவர் 10 ஆம் வகுப்பை நிறைவு செய்ததாகவும் கூறப்படுகிறது. பொது இடங்களில் கல்வித் தகுதி குறித்து எதிர்க்கட்சியினர் காட்டமான கருத்துகளை தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் சிலர் விமர்சித்து வருகின்றனர். மேலும் அம்மாநிலத்தில் இயங்கிவரும் ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் (ATR) எனும் ஒரு அமைப்பு தெரிவித்து இருக்கும் தகவலின்படி அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் பன்னா குப்தா, போக்குவரத்துத் துறை அமைச்சர் சம்பாய் சோரன், சமூக நலத்துறை அமைச்சர் ஜோபாமன்ஜி, தொழிலாளர் மந்திரி சத்யாகாந்த் போக்தா ஆகிய அனைவரும் தங்களது கல்வித்தகுதி 10 என்றே விவர அறிக்கையில் தெரிவித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.