இணையத்தில் குழந்தைகளுக்காகத் தனது புதிய படைப்பை இலவசமாக வெளியிட்ட ஜே.கே ரவுலிங்!!!

  • IndiaGlitz, [Wednesday,May 27 2020]

 

புகழ் பெற்ற ஹாரிபாட்டர் தொடர் கதையின் எழுத்தாளர் ஜே.கே ரவுலிங் கொரோனா காலத்தில் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் வாண்டுகளுக்காக தனது புதிய படைப்பை இணையத்தில் இலவசமாக வெளியிட்டு உள்ளார். ஹாரிபாட்டர் தொடர் கதையின் 7 தொகுதிகளும் மாயாஜால உலகத்தையே சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும். அவர் எழுதிய அத்தனை தொடர்களிலும் ஒரு சிறிய பையன்தான் மையமாக நின்று உண்மைக்காகப் போராடுவது போல கதை பின்னப்பட்டு இருந்தது. இந்த கதை உலகம் முழுவதும் சுமார் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கிட்டத்தட்ட 500 மில்லியன் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் விற்பனை தொகை சில பில்லியன்களையும் தாண்டியது.

ஜே.கே. ரவுலிங்க எழுதும் விதித்திரக் கதைகளுக்கு குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் அடிமைகள்தான். இந்நிலையில் கொரோனா காலத்தில் வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் குழந்தைகள் இலவசமாக படிக்கும் பொருட்டு தனது புதிய படைப்பை இணையத்தில் இலவசமாக வெளியிட்டு இருக்கிறார். அது ஒரு விசித்திர அரக்கனின் கதைத்தொடர் எனவும் அதன் பெயர் The Icksbog தி இக்காபாக் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் சில செய்திகளை மட்டும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். ஹாரிபாட்டர் தொடரை எழுதும்போது தன் மனதில் புதிய அரக்கன் பற்றிய சிந்தனை வந்ததாகவும் அதைத் கொரோனா காலத்தில் எழுதி முடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். தற்போது இணையத்தில் முதல் பாகம் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. அடுத்த பாகம் வரும் ஜுலை மாதத்தின் இறுதிக்குள் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.

தி இக்காபாக் கதையானது வதந்திகளில் கூறப்படும் குழந்தைகளை உண்ணும் விசித்திர அரக்கனைப் பற்றியது. இவர் எழுதும் அனைத்து கதையம்சங்களும் உலகத்தில் இருக்கும் எந்த மொழிக் காரர்களையும் கவர்ந்து விடக்கூடியதுதான். ஏனெனில் உலகத்தின் அனைத்து மூலைகளிலும் இதுபோன்ற விசித்திரக் கதைகள் கூறப்படுவது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா நேரத்தில் அதிக நன்கொடையை வழங்கி இவர் தற்போது தனது கதையையும் இலவசமாக வெளியிட்டு இருக்கிறார் என்பது பலரது மத்தியிலும் பாரட்டை பெற்றுத் தந்திருக்கிறது.